Drugs in TN: தமிழகத்தில் பலவித போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது - ஜி.கே.மணி குற்றச்சாட்டு
அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் கூறப்பட்டு வருவதை குறைக்கவே கள்ள சாராய உயிரிழப்புக்கு தமிழக அரசு இழப்பீடாக அதிகபட்சமாக ரூபாய் பத்து லட்சம் வழங்கியிருப்பதாக கூறினார்.
![Drugs in TN: தமிழகத்தில் பலவித போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது - ஜி.கே.மணி குற்றச்சாட்டு Tamil Nadu Alcohol Poisoning Spurious Liquor Many types of drugs available in TN - Says GK Mani TNN Drugs in TN: தமிழகத்தில் பலவித போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது - ஜி.கே.மணி குற்றச்சாட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/16/799accc3241fe2e86999de5ddbb23c2d1684234699170189_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக இந்த மாதம் 28 ஆம் தேதி பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைய உள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக சேலம் மாநகர் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு அனைத்து மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளின் விடுதி வரை கஞ்சா, அபின் உள்ளிட்ட பலவிதமான போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. பாமகவின் உயிர் மூச்சு கொள்கையான மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். போதைப் பொருட்கள் கிடைப்பதை கட்டுப்படுத்த காவல்துறையில் தனி பிரிவு ஏற்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக பாமக சட்டப்பேரவையில் தொடர்ந்து குரல் எழுப்பும் என்றும் அவர் தெரிவித்தார். மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என இளைய தலைமுறை போதை பொருட்களால் வீணாகி சமூகத்தை சீரழிந்து வருகிறது. போதை பொருள் விற்பனை செய்பவர்கள் தயாரிப்பவர்களுக்கு சமூக பார்வை வேண்டும். போதை பொருட்களை விற்பனை செய்து இளைஞர்களை சீரழிக்க கூடாது. மக்களை அழித்து சம்பாதிக்க கூடாது என்ற விழிப்புணர்வும் அவர்களுக்கு தேவை என்றார்.
கள்ளச்சாராய விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் கூறப்பட்டு வருவதை குறைக்கவே கள்ள சாராய உயிரிழப்புக்கு தமிழக அரசு இழப்பீடாக அதிகபட்சமாக ரூபாய் பத்து லட்சம் வழங்கியிருப்பதாக கூறினார். நிர்வாக வசதிக்காக சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், கோவை, மதுரை போன்ற 10 பெரிய மாவட்டங்களை உடனடியாக பிரித்து அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நீர் ஆதாரத்தை பெருக்கவும் விவசாய வளர்ச்சிக்காகவும் காவிரி உபரி நீர் திட்டத்தை பாமக வலியுறுத்தி வருவதைப் போல முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேட்டூர் அணையில் இருந்து 538 டிஎம்சி தண்ணீர் கடலுக்கு சென்று வீணானதை சுட்டிக்காட்டினார்.
இந்த கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் சதாசிவம் மாநகர் மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)