புதுப்பிக்கப்படும் ஏற்காடு: 158 மேம்பாட்டு பணிகள் ஏற்காடு முழுவதும் நடக்கிறது
ஏற்காட்டில் அமைந்துள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகியவற்றின் கரையோரங்களில் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை.
ஏற்காட்டில் உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் மீத உணவுகள் மற்றும் ஏற்காட்டில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் செயல்பட்டு வரும் பயோ மீத்தேன் கேஸ் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தின் மூலம் மறுசுழற்சி செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பேசிய அவர், சுற்றுலா தலமான ஏற்காட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குப்பைகளை முறையாக கையாளவும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவும் ஏற்காடு ஊராட்சி மன்றத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , இது தொடர்பாக ஏற்காட்டில் உள்ள வணிகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் என அனைவரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டு ஏற்காட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தால் செயல்பட்டுவரும் பயோ கேஸ் பிளாஸ்டிக் மறு சுழற்சி மையத்தின் மூலம் மறு சுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் ஏற்காட்டில் அமைந்துள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகியவற்றின் கரையோரங்களில் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அலங்கார ஏரியை தூய்மைப் படுத்தும் பணி மேற்கொண்டு ஏற்காடு சுற்றுலா பயணிகள் அதிகம் கவரும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஏற்காட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7 பணிகளும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் 8 பணிகளும், மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் 17 பணிகளும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 50 பணிகளும், பழங்குடியினர் மேம்பாட்டிற்கான அவர்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் வினியோகம் தெருவிளக்கு அமைத்தால் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக நான்கு பணிகள் என ஏற்காட்டில் மொத்தம் 158 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்