வேலை வாங்கிக்கொண்டு சம்பளம் தராமல் கொலை மிரட்டல் - வடமாநில தொழிலாளர்கள் புகார்
கட்டிட வேலை பணிகள் முடிந்த நிலையில் 15-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களிடம் ஊதியம் தராமல் விரட்டியதாக குற்றச்சாட்டு.
தமிழகம் முழுவதும் வட மாநில தொழிலாளிகளை அடித்து துன்புறுத்துவதாக வதந்திகள் பரவி வருவதாக தமிழக அரசு கூறி வந்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வினோத் குமார், ராஜேஷ் குமார் ஆகியோர் 20 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுடன் இணைந்து தமிழகத்திற்கு வருகை தந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புதிய வீடுகளில் மரம் தொடர்பான வேலைகள், டைல்ஸ் வேலை உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் பாகல்பட்டி பகுதியை சேர்ந்த அருண் குமார் என்ற இன்ஜினியர் சேலம் மாநகர் பள்ளப்பட்டி மற்றும் வீராணம் பகுதிகளில் புதிய வீடு கட்டுமான பணிகளுக்கு, வட மாநில தொழிலாளர்கள் வினோத் குமார், ராஜேஷ் குமார் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை பயன்படுத்தி கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டின் வேலைகள் முடிந்தவுடன் பணத்தை தரும்படி வடமாநில தொழிலாளர்கள் கேட்டுள்ளனர். அப்போது பணத்தை தர மறுத்து வட மாநிலத்தவர்களை ஊருக்குள் விட்டதே தவறு என்று கூறி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் அடித்துகொலை செய்து புதைத்து விடுவோம் என்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடமாநில தொழிலாளர்கள் வினோத் குமார், ராஜேஷ் குமார் ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர். தாங்கள் செய்த பணிகளுக்கு தரவேண்டிய ஊதிய தொகையை மீட்டு தர வேண்டும் என்றும், உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வட மாநில இளைஞர் ராஜேஷ் குமார் கூறுகையில், "கட்டிட வேலை முடித்த பிறகு வேலைக்கு சென்ற இடத்தில் பணம் கேட்டபோது, வெளி மாநிலத்தைச் சேர்ந்த உனக்கு முழுமையாக பணம் தர முடியாது. நீ எங்கு வேண்டுமானாலும் பொய் சொல்லு, ஆனால் பணம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர். இது மட்டும் இன்றி என்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பணம் தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பணத்தை கேட்டால் ஆட்களை வைத்து அடிக்கின்றனர். 20 பேரை வைத்து ஆறு மாதமாக வேலை செய்த எனக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். கட்டிட வேலை முழுமையாக முடிவடைந்து அவர்கள் குடியேறி உள்ள நிலையில் தங்களை இவ்வாறு மிரட்டுகின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து பணத்தை பெற்று தர வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்