DMK Admin Threatened Police: “எங்கள் ஆட்சி... நாங்கள் சொல்வது தான் கேட்கணும்” - காவலரை மிரட்டிய திமுக பிரமுகர்
சேலம் லைன்மேட்டில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை திமுக முன்னாள் கவுன்சிலர் மிரட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகர் லைன்மேடு பகுதியில் இரண்டு வாலிபர்கள் தனித்தனி இருசக்கர வாகனங்களில் பர்தா போட்ட இரண்டு சிறுமிகளை ஏற்றிக்கொண்டு கோழிக்கடை பேருந்து நிறுத்தம் வழியாக சென்றனர். அப்போது இஸ்லாமியர்கள் சிலர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி மாணவிகளின் பர்தாவை கழட்டச் சொல்லி அதனை வாங்கிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனைக் கண்ட இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் வாலிபர்களிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் சம்பவ இடத்துக்கு வந்து, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மாணவிகளை பைக்கில் ஏற்றி சென்ற இரண்டு வாலிபர்களிடம் விசாரணை நடத்தினார்.
அங்கு வந்த 48வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயாவின் கணவர் ராமலிங்கம் வாலிபர்களுக்கு ஆதரவாக பேசத் தொடங்கினார். சிறப்பு உதவி ஆய்வாளர் இரண்டு வாலிபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார். அப்போது சிறப்பு உதவி ஆய்வாளருக்கும் திமுக கவுன்சிலரின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
எங்கள் ஆட்சி நடக்கிறது நாங்கள் சொல்வது தான் கேட்க வேண்டும். உன்னை பார்த்துக்கிறேன் என பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு உதவி ஆய்வாளரை, ராமலிங்கம் மிரட்டினார். பொதுமக்கள் முன்னிலையிலே திமுக கவுன்சிலரின் கணவர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுமிகளை அழைத்துச் சென்ற இரண்டு வாலிபர்களையும் எஸ்.எஸ்.ஐ மணிகண்டன் செவ்வாபேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சோதனை நடத்தியதில் கேமரா, பென் டிரைவ், மாணவியின் பென்சில் பேனா ரப்பர் என பல்வேறு பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
சேலம் செவ்வாப்பேட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டனை பொது இடத்தில் மிரட்டிய திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆபாச வார்த்தையால் திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், காவலரை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

