கோவையில் வரும் 17, 18 ஆம் தேதிகளில் தொழில்நுட்ப ஜவுளித்துறையின் 2வது மாநில மாநாடு
விரைவில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் மினி ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் துணிநூல் துறையும், இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து வரும் 17, 18 ஆம் தேதிகளில் கோவையில் தொழில்நுட்ப ஜவுளித்துறை சார்ந்த 2 வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை ஆணையர் வள்ளலார், சேலம் மண்டல துணைத் தலைவர் அசோக் குமார், இணை ஒருங்கிணைப்பாளர்கள் வேல் கிருஷ்ணா, மகேந்திரகுமார் சர்மா மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை ஆணையர் வள்ளலார், செயற்கை நூலிழை ஜவுளி உற்பத்தி உலகளாவிய அளவில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் பயனடையும் என்ற நோக்கில் கோவையில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், மத்திய மற்றும் மாநில அரசின் உதவிகள், தொழில்நுட்ப உதவி வழங்கப்பட உள்ளது. சேலத்தைத் தொடர்ந்து நான்கு மாவட்டங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் மினி ஜவுளிப் பூங்கா திட்டம் சிறு தொழில் முனைவோர் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் பயனடையும் வகையில் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 இடங்களில் மினி ஜவுளிப் பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. தலா ரூ.5 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள மினி ஜவுளிப் பூங்காவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.2.5 கோடி மானியமாக இத்திட்டத்திற்காக வழங்கப்படுகிறது.
இந்த வாய்ப்பினை தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 50 சதவீதம் அளவிற்கு அரசு மானியம் வழங்கி வருவதால் தொழில் முனைவோர் ஆர்வமுடன் முன்வருகின்றனர். விரைவில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் மினி ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதில் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா, மருத்துவத்துறை சார்ந்த ஜவுளிப் பூங்கா, பாதுகாப்புத் துறை சார்ந்த ஜவுளிப பூங்காக்கள் தொடங்கலாம். தொழில்நுட்ப ஜவுளித் துறை சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான உடைகள், பாதுகாப்புத்துறை சார்ந்த புல்லட் புரூப் உடைகள், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் அணியக்கூடிய ஆடைகள், விவசாயத்திற்கான பசுமை இல்லம் அமைப்பதற்கான துணிகள், வீடுகள் கட்டுமானத்தின் போது பயன்படுத்தக்கூடிய துணிகள், கார்களில் பயன்படுத்தக்கூடிய துணிகள் வெளிநாடுகளில் அதிக வணிக வாய்ப்பினைக் கொண்டுள்ளது. நம்முடைய பகுதியிலும் விரைவில் வர இருக்கிறது. தொழில்நுட்ப ஜவுளித்துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் முனைவோர் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு மாநாடு நடத்தப்பட உள்ளது. பருத்தி விலை நாளுக்கு நாள் வேறுபடும் நிலையில் இந்த துறையில் தொழில் வாய்ப்பை உருவாக்க உள்ளோம் என்று கூறினார்.