நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்திற்கு 22 சதவீத கமிஷன்? - போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள்
புதிதாக டெண்டர் நடத்தப்பட வேண்டும், லஞ்சம் கேட்பவர்கள் மீது உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை.
சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் ஒரே வளாகத்திற்குள் நெடுஞ்சாலைத்துறை, அரசு தானியங்கி பணிமனை, தர கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களுக்கு பொதுவழி அமைந்துள்ளது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்கு போராட்டம் நடத்த வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் பொதுவழியில் நுழைவாயிலை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் அருகில் இருக்கும் அரசு அலுவலகங்களுக்கு அரசு ஊழியர்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் காவல்துறையினர் கேட்டை பூட்ட சொல்லிதாக அரசு ஊழியர் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நான் எங்கு பூட்ட சொல்லினேன் என்று கூறி காவல் துறையினர் அரசு ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த கருப்பாயி என்பவர் சாலைகள் ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக சாலை ஒப்பந்த பணிகள் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலைகளுக்கு ஒப்பந்தம் கடந்த 7 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை ஒப்பந்தம் கோருவதற்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 22 சதவீதம் லஞ்சம் கேட்பதால் தரமாட்டோம் என்று கூறி, வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு 50க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலை துறை அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தரச்சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்துவதாகவும், சேலம் ஒருங்கிணைந்த நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நிச்சயம் லஞ்சம் தரமாட்டோம், முறைப்படி ஒப்பந்தம் வழங்கவேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே ஒப்பந்தம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் அதிகாரிகள் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
இதற்கு முன்பாக சாலை ஒப்பந்தம் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்த நிலையில் மீண்டும் லஞ்சம் கேட்பதால் லஞ்சம் தரமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 22 சதவீதம் லஞ்சம் வழங்கினால் மக்கள் பயன்படுத்தும் சாலையை தரமாக அமைக்க முடியாது. எனவே தரமற்ற சாலை அமைத்தால் சொந்த ஊர் மக்கள் எங்களிடம் தான் கேள்வி கேட்பார்கள். எனவே லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் பெறமாட்டோம் என்றும் கூறினார். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துங்கள் இரண்டு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரி விடுமுறையில் உள்ளதால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மற்றொரு நாள் வரும்படி கூறினர். அதிகாரி வரும் வரை காத்திருப்பதாக போராட்டக்காரர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் டெண்டருக்கான கால அவகாசம் நேற்று முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் நடத்தப்பட வேண்டும். லஞ்சம் கேட்பவர்கள் மீது உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்திற்கு 22 சதவீதம் லஞ்சம் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.