சேலம் மாநகராட்சியில் ஒரு "ஸ்மார்ட் தெரு" - திமுக கவுன்சிலரின் நூதன முறை விழிப்புணர்வு
அனைத்து வீடுகளிலும் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பாட்டில்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்களின் தேவைக்கு மஞ்சப் பை பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அழகிய சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், எதிர்கால சந்ததியருக்கு தூய்மையான இயற்கை சூழலை உருவாக்க "எனது குப்பை எனது பொறுப்பு" எனும் நமது குப்பைகளை நாமே முறைப்படி அகற்ற வேண்டும் என்ற திட்டத்தை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி 34 வது கோட்டத்தில் சீர்மிகு தெரு என்ற புதிய செயல்பாடு திட்டம் தற்போது துவங்கப்பட்டுள்ளது. 2 ஆம் புது தெருவில் இன்று நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் வீடுகள் தோறும் குப்பைகளை பெறும்போது குப்பைகள் தரம் பிரித்து தருவதை உறுதி செய்யும் வகையில் அவற்றை சுகாதார பணியாளர்கள் பதிவேட்டில் பதிவு செய்தனர். மேலும் சுகாதார பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களோடு மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ, வீடு வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து இங்க் பேனா ஒன்றையும், விழிப்புணர்வு பிரசுரங்களையும் குடியிருப்புவாசிகளுக்கு வழங்கினார்.
இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ கூறுகையில், “தனது 34 வது வார்டில் 2 ஆம் புது தெரு "ஸ்மார்ட் சிட்டி" போன்று "ஸ்மார்ட் தெரு" என்று அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த "ஸ்மார்ட் தெரு" தமிழகத்தில் முன்னோடி தெருவாக தரம் உயர்த்த பட்டு வருகிறது. இதன்படி புது தெருவில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நீளம் மற்றும் பச்சை நிற குப்பை தொட்டிகளை பயன்படுத்தி வருகின்றனர். குப்பையை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். மேலும் புது தெருவில் அனைத்து வீடுகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பாட்டில்கள் பெரும்பளவில் தவிர்க்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்களின் தேவைக்கு மஞ்சப் பை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 34 வது வார்டில் காலை மற்றும் மாலை இரண்டு வேலைகளும் மாநகராட்சி பணியாளர்கள் குப்பையை சேகரித்து வருவதால் வீடுகள் மட்டுமின்றி தெருவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
இதேபோன்று இன்று பெருமளவில் மாணவர்கள் பயன்படுத்தும் பால் பாயிண்ட் பேனாக்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிகின்றனர். அந்த வகை பேனாக்கள் மக்கிப்போவதில்லை. எனவே புது தெருவில் உள்ள மக்கள் அனைவரும் பயன்படுத்த இங்க் பேனாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் 34 வது வார்டு முழுவதும் பிளாஸ்டிக் ஏற்படுத்துவதிலன் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். இதுபோன்று அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாற்றத்தை ஏற்படுத்தினால் தூய்மையான மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என கூறினார்.