Salem Rain Update: சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெய்த மழையின் அளவு எவ்வளவு?
கனமழை காரணமாக ஏற்காடு மலை பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏற்காடு வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
ஃபெஞ்சல் புயல்:
ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடத்த சனிக்கிழமை நண்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. சேலம் மாநகர், ஓமலூர், எடப்பாடி, ஆத்தூர், வீரபாண்டி, வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழையாக பெய்யத் தொடங்கிய நிலையில், நேற்று காலை முதல் இடைவிடாமல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் வெளிய செல்ல முடியாமல் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
24 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்த மழை:
கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 238 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆனைமடுவு பகுதியில் 100 மில்லி மீட்டர் மழையும், ஓமலூரில் 99 மில்லி மீட்டர் மழை, வீரகனூரில் 63 மில்லி மீட்டர் மழையும், தம்மம்பட்டியில் 64 மில்லி மீட்டர் மழை, ஏத்தாப்பூரில் 80 மில்லி மீட்டர் மழை, கரிய கோவிலில் 149 மில்லி மீட்டர் மழை, வாழப்பாடியில் 58 மில்லி மீட்டர் மழை, கெங்கவல்லியில் 60 மில்லி மீட்டர் மழை, சேலம் மாநகர் பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை என சேலம் மாவட்டத்தில் மொத்தம் 1235.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
ஏற்காட்டில் வெளுத்து வாங்கும் மழை:
ஏற்காட்டில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்காட்டில் 238 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏற்காடு முழுவதும் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மழை காரணமாக ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைந்து காணப்படுகிறது. மேலும், கனமழை காரணமாக ஏற்காடு மலை பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏற்காடு வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று ஆரஞ்சு அலர்ட்:
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அதிகளவில் வந்து காய்கறிகள் வாங்கி செல்லும் நிலையில் மழை காரணமாக பொதுமக்கள் வர முடியாததால் விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. தொடர் மழையால் சேலத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனிடையே சேலம் மாவட்டத்திற்கு நேற்று கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான பாதுகாப்பு பணிகளை மாவட்டம் நிர்வாகம் மேற்கொண்டது. இன்றும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கண்காணிப்பு அறையில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த வருகின்றனர். மேலும், மாநகர பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி பணியாளர்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, சேலம் மாநகர பகுதியான அரசு மருத்துவமனை, சூரமங்கலம், குகை, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை , நான்கு ரோடு, ஐந்து ரோடு, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் அஸ்தம்பட்டி பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் நனைந்தபடியே சென்றனர். கடந்த ஒரு வாரமாக பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில், ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் தொடர்மழை பெய்து வருவதால் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. மழையானது தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.