திருமணிமுத்தாற்றில் கலக்கப்படும் சாயக் கழிவுகள்; கருகும் பயிர்கள் - விவசாயிகள் வேதனை
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பல துறைகளுக்கும் புகார் மனு கொடுத்துள்ளனர்.
சேலம் மாநகரப் பகுதியில் பல்வேறு சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. அந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாய கழிவுகள் சேலத்தின் முக்கிய நதியாக பார்க்கப்படும் திருமணிமுத்தாற்றில் கலந்து ஆறு மாசு அடைந்து வருகிறது. நகர் பகுதியில் இருந்து பல கிராமங்கள் வழியாக நாமக்கல் சென்றடையும் திருமணிமுத்தாற்றின் தண்ணீரை விவசாயிகள் பாசன வசதிக்கு பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் திருமணிமுத்தாற்றில் கலந்து விடுவதால் பாசனத்திற்கு பயன்படும் நீர் மாசடைந்து சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பல துறைகளுக்கும் புகார் மனு கொடுத்துள்ளனர். பலமுறை புகார் தெரிவித்துள்ளோம் இருப்பினும் சேலம் மாவட்டத்தில் உள்ள சாயக்கழிவுகளை திருமணிமுத்தாற்றில் கலப்பதை தடுக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்றும் புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.
பின்னர் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, 'சேலம் மாநகரில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் ஆசிட் கலந்த நச்சு தண்ணீரால் நிலத்தடி நீர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் கண்துடைப்பிற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், இதற்கு முழுமையான தீர்வைக் கண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாயப்பட்டறை கழிவுகளால் எங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலான கிணறுகள் மாசடைந்து கழிவு நீராகவே மாறிவிட்டன. அந்த தண்ணீரால் எந்த பயிரையும் விளைவிக்க முடியவில்லை. கால்நடைகளுக்கு தீவனமும் கொடுக்க முடியவில்லை. குடிப்பதற்குக் கூட கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லை. எல்லாவற்றையும் பெரும் பொருட் செலவு செய்து வெளியில் இருந்து வாங்கி கால்நடைகளுக்கு கொடுக்கிறோம். இது மிகப்பெரிய இழப்பை எங்களுக்கு கொடுத்து வருகிறது. எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.