சேலம்: மிக்சர் சாப்பிட்டு, கண்களை துணியால் கட்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்
சேலம் மாநகர் முழுவதும் நடைபெறும் கள்ளத்தனமான மது விற்பனை மற்றும் கஞ்சா, குட்கா உட்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்காத காவல்துறையினரைக் கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகர் பகுதிகளில் முறைகேடாக மது பாட்டில்கள் மற்றும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதை தடுக்க வலியுறுத்தி பலமுறை காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்து சேலம் மாாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு முறைகேடாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதை சுட்டிக்காட்டும் விதமாக வீடியோ எடுக்கப்பட்டபோது செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் கோவிந்தன் என்பவர் அமைச்சர் வரை கமிஷன் தொகை செல்வதாக கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதனை அடுத்து தலைமை காவலரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து சேலம் காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த நிலையில் முறைகேடாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் வரை கமிஷன் போகிறது என்று கூறிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சேலம் மாநகர் முழுவதும் நடைபெறும் கள்ளத்தனமான மது விற்பனை மற்றும் கஞ்சா, குட்கா உட்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்காத காவல்துறையினரைக் கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மிக்சர் சாப்பிட்டும் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டும் நூதன முறையில் போராட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோன்று புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த சம்பவம் தமிழ்நாடு அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த பகுதியில் உள்ள தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறையை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ரவி, தமிழ்நாடு என்ற பெயரை தவிர்த்து தமிழகம் என்று கூறியும், பெரியார் அண்ணா உள்ளிட்ட திராவிட தலைவர்களின் பெயரை தவிர்த்தும் உரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த பொழுது சட்டமன்றத்தை விட்டு வெளியேறி வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் ஆளுநரை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மாநகர பொது செயலாளர் ராஜகணபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இதே போல சேலம் ஜங்ஷன் தபால் நிலையம் தாதகாப்பட்டி இரும்பாலை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.