சேலம் மாநகராட்சியின் 25 வது ஆணையாளராக ரஞ்ஜீத் சிங் பொறுப்பேற்பு
சேலம் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த ஆணையாளர் பாலசந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சியின் 25 ஆவது ஆணையாளராக ரஞ்ஜீத் சிங் நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக மாநகராட்சி அலுவலகம் வந்த சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர் புதிய மாநகராட்சி ஆணையாளராக பதவி ஏற்றவர்க்கு மாநகராட்சி அதிகாரிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
2016 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ரஞ்ஜீத் சிங் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். குன்னூர், நாகப்பட்டினத்தில் பணியாற்றிய இவர், கால்நடை பராமரிப்புத் துறையின் துணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். நாகப்பட்டினம் கூடுதல் ஆட்சியராக இருந்த ரஞ்ஜீத் சிங் சேலம் மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "சேலம் மாநகராட்சியில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஸ்வச் பாரத் உள்ளிட்ட பணிகள், வெள்ளத்தடுப்பு பணிகள், பாதாள சாக்கடைப் பணிகளை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம், அங்காடிகள், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பணிகளில் இருந்து மாநகராட்சிக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தெருநாய்களை கட்டுப்படுத்த 2 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. உரிய ஆய்விற்கு பின்னர் தேவைப்பட்டால் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சேலம்-திருச்சி பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆடித் திருவிழா கொண்டாடத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 6 மாதமாக மாநகராட்சிக்கான வரி வருவாய் திருப்திகரமாக உள்ளது. இதனை அதிகப்படுத்தவும் நிலுவையில் உள்ள ரூ. 272 கோடியை வசூலிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார்.