Lockup Death: சேலம் மத்திய சிறையில் கைதி மரணம்... உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கை, கால் மற்றும் முகங்களில் பல காயங்கள் இருந்தது. எனவே அடித்து துன்புறுத்தி காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம்.

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தெய்வசிகாமணி. இவர் மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 8 ஆம் தேதி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிறையில் நேற்று இரவு தெய்வசிகாமணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டது. உடனடியாக, காவல்துறையினர் தெய்வசிகாமணியின் குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
இந்த நிலையில், தெய்வசிகாமணியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால் சிறையில் அடித்து துன்புறுத்தி இருக்கலாம். அதனால் அவர் இறந்திருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் சடலத்தை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மது விற்பனை செய்வதை விட்டு விட்ட நிலையில் காவல்துறையினர் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விற்பனை செய்ய அறிவுறுத்தியதாகவும், அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். இதற்கு உரிய நீதிமன்ற விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பின்னர், தெய்வசிகாமணியின் மகன் தீபக் குமார் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த எட்டாம் தேதி சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்றைய தினம் இரண்டு காவலர்கள் தனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறினர். இங்கே வந்து பார்த்தபோது தந்தை தெய்வசிகாமணி இறந்து பிணவறையில் இருந்தார். கை, கால் மற்றும் முகங்களில் பல காயங்கள் இருந்தது. எனவே அடித்து துன்புறுத்தி காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே எனது தந்தையை அடித்து கொன்ற காவலர்கள் மீது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் தெய்வசிகாமணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறைச்சாலையில் கைதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

