சேலத்தில் ஹெல்மெட் வாங்கினால் தக்காளி இலவசம்...!
’’கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜம் ஜம் ஹெல்மெட் கடை 'தலைக்கு ஹெல்மெட் முக்கியம், சமையலுக்கு தக்காளி முக்கியம்' என சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது’’
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பருவமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் சேலம் மாவட்டத்தில் உள்ள மொத்த சந்தைகளில் தக்காளி ஒரு கிலோ 100 க்கும் சில்லறை வியாபாரிகள் 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் முக்கிய சந்தைகளாக விளங்கும் வாழப்பாடி, தலைவாசல் சந்தைகளில் தக்காளி வரத்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தக்காளியின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதை சாதகமாக பயன்படுத்தி சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜம் ஜம் ஹெல்மெட் கடை 'தலைக்கு ஹெல்மெட் முக்கியம், சமையலுக்கு தக்காளி முக்கியம்' என சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதில் 449 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இச்சலுகை நாளை வரை மட்டுமே என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடையில் விற்பனையை துவக்கி வைத்து பேசிய நடிகர் பெஞ்சமின், மனிதர்களின் உயிருக்கு தலைக்கவசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று உணவிற்கு தக்காளி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. மேலும், தற்பொழுது நாம் இருக்கும் சூழலில் நம் அனைவரும் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ளேன். இரண்டையும் காப்பாற்றும் விதமாக ஜம்ஜம் தலைக்கவசம் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. நம் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
மேலும் இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது காசிம் கூறுகையில், தக்காளி விலை இன்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், எங்களது கடையில் தலைக்கவசம் வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறேன். அழிந்து வரும் விவசாயத்தை காப்பாற்ற நம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார். மேலும், மக்களை கவரும் விதமாக இந்த சிறப்பு சலுகையை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறினார். மேலும் இதற்கு முன்பு கடந்த ஆண்டு வெங்காயம் விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த போது, ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கியதாகவும், கடந்த மாதத்தில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோலில் இலவசமாக வழங்கியதாக கூறினார்.
சிறுமியை சாலையில் நிறுத்திவிட்டு மதுவாங்க சென்ற தந்தை - பாலியல் தொல்லை தர முயன்றவருக்கு தர்ம அடி