Salem: திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் - மாமன்ற கூட்டத்தைவிட்டு வெளியேறிய அதிமுக
பரபரப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற சேலம் மாநகராட்சியின் மன்ற கூட்டம்.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற இயல்பு கூட்டம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இன்றைய தினம் பரபரப்பும், கடும் வாக்குவாதமும் நிறைந்து காணப்பட்டது. திமுக கவுன்சிலர் கலையமுதன் பேசியபோது, அதிமுக ஆட்சியில் சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தவில்லை என பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் எழுந்து சத்தம் எழுப்பினர். அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் தான், தங்கு தடையின்றி சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது என்று பதிலுக்கு அதிமுக கவுன்சிலர்கள் பேசினர். இதனால் அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தவறான தகவல்களை பேசுவதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் திமுக கவுன்சிலர் கலையமுதன் தொடர்ந்து அரைமணி நேரத்தில் பேசிக்கொண்டே இருந்ததார். இதனால் கடுப்பான மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பொதுக்கூட்டமா இவ்வளவு நேரம் பேசுவது என்று கேள்வி எழுப்பினார். இதனிடையே மற்ற திமுக கவுன்சிலர் எழுந்து பேசுவதை நிறுத்துமாறு சத்தம் எழுப்பினர். அப்போது திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே திமுக கவுன்சிலர் கலையமுதன் பேசியபோது, தமிழக முதல்வர், அமைச்சர் கே.என்.நேரு குறித்து பேசியதற்கு ஒரு சில திமுக கவுன்சிலர்கள் மட்டுமே மேஜையை தட்டி வரவேற்றனர். இதற்கு திமுக குறித்து பேசுவதற்கு, திமுக கவுன்சிலர்களே மேஜையை தட்ட மறுப்பதாக என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு முன்பாக மாநகராட்சி கூட்டம் துவக்கமாக, 9 வது வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம் பேசினார். அப்போது, 44 வது வார்டு கவுன்சிலர் இமயவரம்பன் தனது வார்டில் ஒரு ஆண்டில் 30 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புத்தகம் வெளியிட்டார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் திமுக கவுன்சிலர்களை விட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் சிறப்பாக செயல்படுவதாக பரப்பப்பட்டு வந்தது. இதற்கு திருமாவளவனின் காலம் என்று கவுன்சிலர் இமயவரம்பன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனை சுட்டிக்காட்டி திமுக கவுன்சிலர் தெய்வலிங்கம், சேலம் மாநகராட்சியில் உள்ள மற்ற வார்டுகளிலும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மற்ற கவுன்சிலர்கள் தங்களது பணிகளை குறிப்பிட்டு வெளியிடவில்லை. இவ்வாறு குறிப்பிட்டு விளம்பரம் தேடிக் கொள்ளக்கூடாது என்றும் கூறினார். குறிப்பாக புத்தகத்தை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனை வைத்து வெளியிடப்பட்டது. மாநகராட்சி மேயரை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினார். இதற்கு கவுன்சிலர் தெய்வலிங்கம் கண்டனம் தெரிவித்தார். மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதால் திருமாவளவனின் காலம் என்று பேச முடிகிறது என்றார். அப்போது அதற்கு பதிலளிக்க இமயவர்மன் பேசத் துவங்கியபோது மற்ற திமுக கவுன்சிலர்கள், வீண் வாக்குவாதம் தேவையற்றது என்று கூறி பேசவிடாமல் தடுத்துவிட்டனர்.
இதேபோன்று சேலம் மாநகராட்சியின் 34 வது வார்டு உறுப்பினர் ஈசன் இளங்கோ பேசியபோது, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் சிலர் குப்பையினை வண்டியில் சென்றபடி தூக்கி எறிகின்றனர். எதற்கு உடனடியாக மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இது போன்ற காரியங்களில் ஈடுபடும் பொதுமக்களுக்கு அதிகபட்ச தண்டனையாக 5 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தான்.