Rasimanal Dam: காவிரி நடுவே உருவாகும் புதிய அணை? - எங்கு தெரியுமா?
Rasimanal Dam Project: தமிழ்நாடு, கர்நாடகா இரண்டு மாநிலங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக உள்ளது புதிய அணை... எங்கு தெரியுமா?
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க்கில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டிற்கு வருகிறது.
காவிரியின் நடுவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழக எல்லையான ராசிமணலில் அணை கட்டுவதற்கு கோரிக்கை எழுந்துள்ளது.
மேகதாது அணை:
கர்நாடக அரசு 9000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு திட்டமிட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கனகபுரா பகுதியில் மேகதாது அணை கட்டப்பட உள்ளது. இது ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், பெங்களூரில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலம் 67 டிஎம்சி தண்ணீர் கர்நாடகா அரசு தேக்கி வைக்க முடியும். இதேபோல் பெங்களூர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மேலும், நான் ஒரு மெகா வாட் புனல் மின் நிலையம் அமைப்பதற்கும் கர்நாடகா அரசு திட்டமிட்டு வருகிறது.
காவிரி பங்கீடு விவகாரம்:
காவிரி பிரச்சனை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. மைசூர் சமஸ்தானம் மற்றும் சென்னை மாகாண அரசு இடையே காவிரி பங்கீடு தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவிரி நடுவே அணை கட்டுவதற்கு சென்னை மாகாண அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என 1992 ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், சென்னை மாகாண அரசுக்கு ஆண்டுதோறும் 575 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் கர்நாடகா அரசு ஒப்பந்தங்களை மீறியது.
மேலும் காவிரி துணை நதிகளான ஹேமாவதி, ஆரங்கி உள்ளிட்ட பகுதிகளில் அணைகளை கட்டியது கர்நாடகா அரசு. இதனால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் மறுக்கப்பட்டது. தொடர்ந்து, மத்திய அரசிடம் தமிழக அரசு முறையிட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டத்தை நடத்திய தமிழக அரசின் முயற்சியால் காவிரி நடுவன் மன்றம் அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவன் மன்றம் இறுதி தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்டது. ஆனால் கர்நாடகா அரசு இந்த இரண்டு தீர்ப்பையும் ஏற்பதில்லை. கடந்த ஆண்டு வரை தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு வழங்குவதில்லை. இதற்கு மாறாக உபரிநீரை காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்திற்கு போதுமான தண்ணீர் வழங்கப்படாமல் உள்ளது.
காமராஜரின் கனவு திட்டம்:
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் பற்றாக்குறை காரணமாக 1961 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம் ராசிமணல் அணை திட்டம். அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ராசிமணலில் அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். பின்னர் தீர்மானம் மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் இன்று வரை ராசிமணலில் அணை கட்ட எந்த அரசும் முன் வரவில்லை.
ராசிமணல் அணை:
கர்நாடகாவில் தொடங்கும் காவிரி ஆறு தமிழகத்தில் 800க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இதில் மேகதாது முதல் ஒகேனக்கல் இடையிலான 60 கிலோமீட்டர் தூரம் இடது கரை தமிழகத்திலும், வலது கரை கர்நாடகாவிலும் காவிரி ஆறு பாய்ந்து ஓடுகிறது. ராசிமணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்டினால் குறைந்த செலவில் 50 முதல் 100 டிஎம்சி வரையிலான தண்ணீர் தேக்கி வைக்க முடியும். குறிப்பாக மேகதாதவிலிருந்து ராசிமணல் வரை உள்ள 60 கிலோ மீட்டர்களில் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
மேட்டூர் அணையில் நீர் குறையும் போது ராசிமணலில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ஆண்டுதோறும் கர்நாடகாவிடம் தண்ணீருக்கு ஏங்க வேண்டிய அவசியம் இருக்காது. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு உரிய நேரத்தில் குறுவை, சம்பா சாகுபடி செய்வதற்கு போதுமான தண்ணீர் திறக்கப்படும்.
மேலும், ராசிமணல் அணையில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு தமிழ்நாடு, கர்நாடகா இரண்டு மாநிலங்களுக்கும் மின்சார தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோன்று இரண்டு மாநிலத்திலும் நிலத்தடி நீர் பெருகுவதோடு, காட்டு விலங்குகள் தண்ணீருக்காக கிராமப் பகுதிகளுக்கு வருவது தடுக்கப்படும்.
கர்நாடகா அரசு தமிழகத்திற்கு போதுமான நீர் வழங்கப்படாத சூழ்நிலையில் தற்போது ராசிமணலில் அணைக்கட்டும் திட்டத்திற்கு கோரிக்கையும், தேவையும் அதிகரித்துள்ளது. எனவே தமிழக அரசு மறுபரிசீலனை செய்து ராசிமணலில் அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.