பஹல்காம் தாக்குதல் எதிரொலி; ஏற்காடு, மேட்டூர் அணைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
சேலம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவின் பேரில், 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி, 28 சுற்றுலாப்பயணிகளை கொடூரமாக கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும், ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவின் பேரில், 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் ஆத்தூர் டவுன், புதுப்பேட்டை, தம்மம்பட்டி பஜார் தெரு, கெங்கவல்லி டவுன், வாழப்பாடி, பேளூர், ஓமலூர், இடைப்பாடி பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் பற்றி கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல், மாவட்டத்தின் முக்கிய இடங்களான மேட்டூர் அணை, மேட்டூர் அனல் மின்நிலையம், செக்கானூர் தடுப்பணை, சேலம் காமலாபுரம் விமான நிலையம், கே.ஆர். தோப்பூர் மின்பகிர்வு அலுவலகம், ஏற்காடு சுற்றுலாத்தலம் ஆகிய இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமான போலீஸ் பாதுகாப்புடன் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு, தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் மலை அடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் தீவிரமாக சோதனையிட்டு, அனுப்பி வருகின்றனர். மேலும், ஏற்காட்டில் அண்ணா பூங்கா, ஏரிக்கரை, ரோஜா தோட்டம் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்து கண்காணிக்கின்றனர். இந்த கண்காணிப்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று, முக்கிய ரயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் தமிழகத்தில் சென்னை, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு ரயில்வே போலீசார் இணைந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் ஏறி சோதனையும் நடத்தி வருகின்றனர். சேலம் ஜங்ஷனில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில் குமார் தலைமையிலான போலீசார், பிளாட்பாரங்களில் சோதனை நடத்தினர். தொடர்ந்து, கோவை எக்ஸ்பிரஸ், மும்பை சென்ற குர்லா எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏறி மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். வட மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து ரயில்கலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.





















