துணி உலர்த்தும்போது மின்சாரம் தாக்கியதில் தாய், மகள், பேத்தி உயிரிழப்பு
வீட்டில் துணி உலர்த்தும்போது மின்சாரம் தாக்கியதில் தாய், மகள், பேத்தி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டப்பள்ளியைச் சேர்ந்தவர் சிவா, இவருக்கும் ஊத்தகரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி பிச்சுமணி-இந்திரா தம்பதியின் மகளான மகாலட்சுமிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சிவா-மகாலட்சுமி தம்பதிக்கு 3 வயதில் அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவர் சிவா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவாவை பிரிந்து மனைவி மகாலட்சுமி தனது குழந்தை அவந்திகாவுடன் தனது தந்தையான கூலித் தொழிலாளி பிச்சுமணியின் வீட்டில் வசித்து வருகிறார்.
காலையில் பிச்சுமணியின் மனைவியும் மகாலட்மியின் தாயுமான இந்திரா தனது 3 வயது பேத்தி அவந்திகாவை இடுப்பில் வைத்துக்கொண்டு வீட்டு மாடியில் ஈரத்துணிகளை கம்பியில் போட்டு உலர்த்திக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த மின்சார கம்பிகளில் ஈரத்துணிகள் உரசியதில் இந்திராவையும் அவரது 3 வயது பேத்தி அவந்திக்காவையும் மின்சாரம் தாக்கியது.
இவர்கள் இருவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து ஓடி வந்த மகாலட்சுமி தனது தாய் மற்றும் மகள் இருவரையும் மின்சாரம் தாக்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது தாயையும் மகளையும் காப்பாற்ற மகாலட்சுமி முயன்றபோது மகாலட்சுமியையும் மின்சாரம் தாக்கியது. இதனால் இந்திரா மற்றும் அவரது மகள் மகாலட்சுமி மற்றும் அவரது மகள் அவந்திகா ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒரே வீட்டைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு மின்சாரம் தாக்கியது குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் உடனடியாக மின்சாரம் அப்பகுதியில் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி மூன்று பெண்கள் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காரப்பேட்டை துணை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவல்துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று பெண்கள் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் ஒரே வீட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் பரிந்தாபமாக உயிரிழந்தது ஊத்தகரை மக்களிடையே அதிர்ச்சியையும் வேதனையும் அளித்துள்ளது. வீட்டின் அருகே செல்லும் மின்சார கம்பியானது இனி யாரையும் பாதிக்காத அளவிற்கு சரி செய்து அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சிங்காரப்பேட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
Edappadi Palanisamy: ‛பாஜகவில் இணையமாட்டார் ராஜேந்திர பாலாஜி...’ -அடித்து சொல்லும் இபிஎஸ்!