Udayanidhi Stalin Inspection: காலை உணவு திட்டத்தை திடீர் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மாணவர்களின் வருகை பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிறதா? சுகாதாரமான முறையில் உணவு பரிமாறப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழக முழுவதும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியில் உள்ள 54 அரசு துவக்கப் பள்ளிகளில் இத்திட்டம் துவக்கப்பட்டது. இதற்காக சேலம் மாநகரப் பகுதிகளில் ஐந்து இடங்களில் சமையல் கூடங்களில், உணவு தயாரிக்கப்பட்டு 54 பள்ளிகளுக்கும் கொண்டுவரப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திங்கள், வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் உப்புமாவும், செவ்வாய், வெள்ளி ஆகிய இரண்டு தினங்களுக்கு கிச்சடி உடன் இனிப்பு உணவாக வழங்கப்படுகிறது. புதன்கிழமை ஒருநாள் பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 5455 குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். அடுத்த கல்வியாண்டில் மாவட்ட முழுவதும் நித்திட்டம் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் பள்ளி வகுப்பறைகள், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களின் வருகை பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிறதா? சுகாதாரமான முறையில் உணவு பரிமாறப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். பள்ளி ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஒவ்வொரு மாவட்டங்களுக்கு செல்லும்பொழுதும் களஆய்வு செய்து வருவதாகவும், பள்ளி குழந்தைகள் நிறைய பள்ளிகளுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் திட்டம் செயல்பட்டு வருகிறது என்றார். மேலும் பள்ளியில் சில பிரச்சினைகளை கூறுகிறார்கள். பள்ளியில் வழங்கப்படும் உணவின் தரம் நன்றாக உள்ளது. ஒவ்வொரு நாட்களுக்கும் ஒருஉணவு வழங்கபடுவதால் மாணவர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். மாணவர்கள் அரசு பள்ளிக்கு வரும் சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், சாப்பிட்டுவிட்டு படித்து வருகிறார்கள் என்றும் உதயநிதி கூறினார்.