EV Velu about DMK IT Wing: தமிழக அரசின் டிஐபிஆர் விட திமுக ஐ.டி விங் சிறப்பாக செயல்படுகிறது - அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்
அமெரிக்க தேர்தலில் கமலாஹாரிஸ் ஜெயிப்பார் என சொல்லப்பட்டது, ஊடகங்கள் கடைசி 18 நாளில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் டிரம்ப் ஜெயித்து விட்டார். அதைப்போல அறிவாளி அணியான ஐ.டிவிங்க செயல்பட வேண்டும் என பேசினார்.
சேலத்தில் நடைபெற்ற திமுக தகவல் தொழில்நுட்ப அணி சேலம் மண்டல ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியது, ஐ.டி விங் செயலாளர் அமைச்சர் ராஜா, உலகம் சுற்றும் வாலிபனாக இருக்கிறார். முதலமைச்சரோடு இணைந்து அவர் உலகம் முழுவதும் சுற்றி தொழில் துறை அமைச்சராக செயலாற்றி வருவதால் தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடு வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக திமுக ஐ.டி விங் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்றால், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், எங்கே செல்ல போகிறோம் என்று தெரிந்து கொண்டால்தான் முழுமையாக செயல்பட முடியும். பல கோடி மக்களுக்கு செய்திகளை, தகவல்களை கொண்டு சேர்க்கும் பணியில் இருக்கும் ஐ.டி விங் அணி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். திமுக ஆரம்பித்த புதிதில் பேரறிஞர் அண்ணாவின் எண்ணங்களை, கட்சியின் கொள்கைகளை நாடகம் மூலம் கொண்டு சேர்த்தோம். அதில் முன்னணியில் கலைஞர் இருந்தார். அதேபோல, முதலமைச்சர் ஸ்டாலினும், நாடகத்தின் மூலம் பல நகரங்களுக்கு திமுகவின் கொள்கைகளை கொண்டு சேர்த்தார் என்றார்.
அதற்கு பின்னால், திரைப்படங்கள் மூலம் திமுகவின் கொள்கைகள் மக்களிடம் சேர்க்கப்பட்டன. டூரிங் டாக்கீஸ் கூட இல்லாத கிராமங்களுக்கு கூட தன்னுடைய வசனத்தின் மூலம் திரைப்படத்தின் மூலம் அண்ணாவும் கலைஞரும் சேர்த்தார்கள். கட்சி ரீதியான மூன்று அமைப்புகளை பயன்படுத்தி கிராமங்கள்தோறும் படிப்பகங்கள் தொடங்கப்பட்டன. அந்த படிப்பகங்களில் தினசரி, வார இதழ்கள் வாயிலாக செய்திகள் சேர்க்கப்பட்டன. விடுதலை, குடியரசு பத்திரிக்கை மூலம் தந்தை பெரியாரும், திராவிட நாட்டின் மூலம் அண்ணாவும், முரசொலி வாயிலாக கலைஞரும், இளம் சூரியன் மூலம் முதல்வர் ஸ்டாலினும் திமுகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். தென்னகம் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் மூலம் மற்ற நிர்வாகிகள் செய்திகளை சேர்த்தனர். அதன் தொடர்ச்சியாக தொலைக்காட்சிகள் திமுகவின் கொள்கைகளை வீடுகள் தோறும் கொண்டு சேர்த்தனர். 5-ம் தலைமுறையினரின் பிரதிநிதியாக இருக்கும் துணை முதலமைச்சரின் நிகழ்ச்சிகள், ஆட்சியின் செய்திகள் தொலைக்காட்சிகளில் அதிகம் வருகிறது. தொலைக்காட்சிக்கு பிறகு நாட்டு மக்களிடம் அதிக அளவில் சமூக ஊடகங்கள் கொண்டு சேர்க்கின்றனர். நாடகம், திரைப்படம், படிப்பகம், தொலைக்காட்சி, நாளிதழ்கள் வரிசையில் சமூக ஊடகங்கள் கொண்டு சேர்க்கின்றன. செய்தி ஊடகத்திற்கும் சமூக வலைத்தளத்திற்குமான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது என்று கூறினார்.
பாஜக உள்ளிட்ட எதிரிகள் பலகோடி பணத்தை செலவிட்டு தொழில்முறை கட்டமைப்பை உருவாக்கினாலும் அதை திமுக ஐ.டி விங் நிச்சயம் முறியடிக்கும். இன்ஸ்டாகிராமை இஷ்ட கிராமாக இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப், பேஸ் புக் என அனைத்து ஊடகங்களில் அரசியல் நிகழ்வை விரல் நுனியில் வைத்திருந்து ஐ.டி விங் நிர்வாகிகள் சரியான தகவல்களை கொடுத்தால்தான் மற்றவர்களை எதிர்கொள்ள முடியும். முதலமைச்சர், துணை முதலமைச்சர், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை சமூக ஊடகங்களில் உடனுக்குடன் பரப்ப வேண்டும். அதிகாரபூர்வ பக்கங்களை பின்தொடர்வதுடன், லைக் அதிகம் கொடுக்க வேண்டும். லைக் கொடுக்காவிட்டால் மங்கி விடுவீர்கள். முழுமையான தரவுகள் இல்லாவிட்டால் பின்தங்கி விடுவீர்கள். தேசிய மற்றும் சர்வதேச அளவில் தகவல்களை பரப்பு எக்ஸ் தளத்தில் கணக்கு தொடங்கி , ஹேஷ்டேக் டிரண்டிங் செய்வதில் அதிக பங்களிப்பினை ஐ.டி விங் நிர்வாகிகள் பரப்ப வேண்டும். திமுக அரசின் சாதனைகளை இன்ஸ்டாகிராம் மூலம் வீடியோக்களாக, புகைப்படங்களாக கொண்டு சேர்க்க வேண்டும். இதனை அனைவருக்கும் பரப்ப வேண்டும். வாட்ஸ் அப் மூலமும் தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும். வாட்ஸ் அப் மூலம் நல்ல செய்திகள், சாதனைகளை கொண்டு சேர்ப்பதுடன் வதந்திகளை மறுக்க வேண்டும். உறுதி செய்யப்பட்ட தகவல்களை மட்டுமே பதிவிட வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். உண்மை செய்திகளை படித்து பார்த்து உணர்ந்து பகிர வேண்டும். கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரும் உண்மை செய்திகளை பகிர வேண்டும். அரசியல் சார்ந்த குழுக்கள் உள்ளிட்ட மூன்று பகுதியாக பிரித்து கொண்டு முன்னுரிமை அடிப்படையில் தகவல்களை பகிர வேண்டும் என்றார்.
யூ டியூப் அதிகளவில் கன்டன்ட் உள்ளது. அதில்தான் அறிவாளிகள் அதிகம் பேசுகிறார்கள். அதை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. கட்சி நிர்வாகிகள் அதிகமாக அதில் பேசுவதால், யு டியூப்ஐ அதிகம் பயன்படுத்த வேண்டும். சுப.வீரபாண்டியன், செந்தலை கெளதமன் போன்ற மூத்தவர்கள் பேசுவதை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். புதிதாக ரீல்ஸ் வந்துள்ளது. 90 வினாடிகள் அதில் பதிவு செய்ய முடியும். விரைவாக சென்றடைய டிரண்டாகும் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களில் எதிரிகளால் அவதூறு பரப்புவதை உங்களுடைய திறமையை பயன்படுத்தி மறுக்க வேண்டும். பொய் செய்திகளை மறுக்க விளக்கங்களை இளைஞர் அணி, ஐ.டி விங், முரசொலை வலைத் தளங்களில் தெரிந்து கொள்ளலாம். அரசின் சாதனைகளை, கட்சியின் சாதனைகளையும் பரப்ப வேண்டும். அரசின் சார்பில் டிஐபிஆர் உள்ளது. அந்த அதிகாரிகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு போட்டியாக திமுக ஐ.டி விங் சிறப்பாக செயல்படுகிறது. தூங்குகிற நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் ஐ.டி விங் செயல்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் ஐ.டி விங் பங்கு மிகப் பெரியது. மாவட்ட கழகத்தால் ஐ.டி விங் நிர்வாகிகள் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. நம்மைத் தாண்டி இந்த தம்பிகள் செல்ல மாட்டார்கள் என்று நம்புகிறார்கள். நம் மீதான பழிச் சொல்லை தவிர்ப்பதற்காகவே ஐ.டி விங் செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகிகள் ஐ.டி விங் கிற்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அதிகளவில் செய்திகள் மக்களை சென்றடையும். ஒவ்வொரு மாவட்டமும் மற்ற மாவட்டத்தை மிஞ்சும் அளவிற்கு செயல்பட வேண்டும். தேர்தலுக்கு பின்னால் சிறப்பாக ஆட்சிக்கும் கட்சிக்கும் தேர்தலுக்கும் பயன்பட்டது என்பதை கண்டறிந்து பரிசு கொடுக்க வேண்டும். அமெரிக்காவின் தேர்தலைப் பார்த்து உலகம் வியக்கிறது. கமலா ஹாரிஸ் தான் ஜெயிப்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், ஊடகங்கள் கடைசி 18 நாளில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் டிரம்ப் ஜெயித்து விட்டார். அதைப் போல அறிவாளி அணியான ஐ.டி விங்க செயல்பட வேண்டும் என்று பேசினார்.