Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிரடி சரிவு - வினாடிக்கு 1,30,000 கன அடியாக குறைந்தது
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதுமாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
![Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிரடி சரிவு - வினாடிக்கு 1,30,000 கன அடியாக குறைந்தது Mettur Dam water flow drops dramatically -1,30,000 cubic feet per second - TNN Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிரடி சரிவு - வினாடிக்கு 1,30,000 கன அடியாக குறைந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/02/4af87ec0e941d6a22be0dcb89c3c67391722598209089113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அனைத்தும் நிரம்பி காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்னர் வறண்டு காணப்பட்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.
நீர் திறப்பு:
இதனிடையே கடந்த 28 ஆம் தேதி முதற்கட்டமாக டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இது மேலும் அதிகரிக்கப்பட்டு தற்போது அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதம் திறக்கப்பட உள்ளது. 16 கண் மதகுகள் வழியாக 1,08,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,71,000 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர், மதியம் 12 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 57 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இது மேலும் குறைந்து மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,30,000 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அணியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி-யாக உள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் வந்து கொண்டுள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனம்:
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்களுக்கு, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் 30.07.2024 முதல் 13.12.2024 வரை 137 நாட்களுக்கு, அணையின் நீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் மூலம் மொத்தம் 45000 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. இதில் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை:
மேட்டூர் நகராட்சி சார்பில் உபரிநீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள தங்கமாபுரிபட்டணம், பெரியார் நகர், தூக்கனாம்பட்டி, மாதையன்குட்டை உள்ளிட்ட கிராமங்களில் காவிரிக் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதேபோன்று காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தமிழக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)