மேட்டூர் அணை: 16 கண் மதகு, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ஒரு லட்சம் கன அடி வரை உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை 42 வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் ஒரு லட்சம் கன அடி வரை உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். மேட்டூர் கட்டி முடிக்கப்பட்ட 89 ஆண்டு கால வரலாற்றில் 42 வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று காலை 9.55 மணிக்கு எட்டியது. இதனையடுத்து, அதன் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் மேட்டூர் அணையில் இடது கரையில் மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் மதுசூதனன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து, 16 கண் பாலத்தில் உள்ள ஒவ்வொரு மதகுகளும் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனை சேலம் கேம்ப் பகுதியில் இருந்த பாலத்தில் நின்றபடி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியே எட்டி உள்ளதால் கடல் போல் காட்சி அளிக்கிறது. முதல் கட்டமாக 25 ஆயிரம் கன அடி நீர் 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டது. இது படிப்படியாக ஒரு லட்சம் வரை உயர்த்தப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே மேட்டூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி வரை உபரிநீர் திறக்கப்படுகிறது.
அணை நிரம்பியதால் வரும் உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்படும் என்பதால் காவிரிக் கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறை , தீயணைப்புத்துறை ஊரக வளர்ச்சித்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதியில் காவிரிக் கரையோரப் பகுதிகள் முழுமையாக கண்காணிக்கப்படுகின்றன.
மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், கால்வாய் பாசனத்திற்காக தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி 15 நாட்கள் முன்னதாகவே இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்