‛டெண்டர் விடுங்க...’ கொதித்த அதிமுக... ‛பொய் சொல்றாங்க...’ கொந்தளித்த திமுக... பரபரப்பில் கரூர் மாவட்ட கவுன்சில் கூட்டம்!
கரூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் அதிமுக-திமுக இடையே பரபரப்பபான வாக்குவாதம் ஏற்பட்டது.
கரூர் மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் கண்ணதாசன்(அதிமுக) தலைமையில் நடந்தது. மாவட்ட ஊராட்சி செயலாளர் குருவம்மாள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் பேசினர். இதோ அந்த விவாதம்:
திருவிகா (அதிமுக): மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள அவர்கள் சார்ந்த ஒன்றியங்களுக்கு அந்த பணிகள் அனுப்பப்பட்ட போதிலும், பல அதிமுக கவுன்சிலர்களின் பணிகளுக்கு இப்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை. நான் அளித்த நான்கு சாலை பணிகளுக்கு மூன்று முறை டெண்டர் வைத்ததாகவும், யாரும் டெண்டர் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால் டெண்டர் அழைப்பு குறித்து எனக்கு கூட தெரியவில்லை, தெரியப்படுத்தவுமில்லை. இப்போது வேறு பணியை செய்ய கருத்து கேட்கின்றனர். மாவட்ட கவுன்சிலர்களின் பணிகளை செயல்படுத்தாமல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
கார்த்தி(திமுக) : ஒட்டுமொத்தமாக அரசையும், அதிகாரிகளையும் குறை சொல்லி பேசக்கூடாது. தவறு செய்தவர்களை குறிப்பிட்டு பேச வேண்டும், திமுக அரசு சிறப்பாக மக்கள் பணியாற்றி ஓராண்டை பூர்த்தி செய்துள்ளது. அதற்காக தமிழக முதல்வருக்கும். கரூர் மாவட்டத்திற்கு ரூ.2000 கோடிக்கு மேற்பட்ட திட்டங்களையும் , விவசாய கல்லூரி உள்ளிட்ட பல திட்டங்களையும் கொண்டு வந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், அதற்கு உத்தரவிட்ட முதல்வருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறோம். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பணியாற்றிய அதே அதிகாரிகள் தான் இப்போதும் பணியாற்றுகின்றனர். அப்போதும் பணியில் ஏதாவது பிரச்சனை இருந்தால் ஒரு வேலையை யாரும் டெண்டர் கேட்கவில்லையென்றால், மாற்றி வேறு பணி கேட்பது இயல்பானதுதான்.
ரமேஷ் (அதிமுக) : அதிமுக ஆட்சி காலத்தில் திமுக கவுன்சிலர்கள் பகுதிகளிலும் முறையாக டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்தன. யாரையும் மாற்று கட்சி என்று பார்க்கவில்லை. ஆனால், இப்போது மக்கள் பணி என்று கூட கருதாமல், அதிமுக கவுன்சிலர்கள் பணி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். இந்த நடைமுறை மாறவேண்டும் என்பது தான் எங்கள் கருத்து. நான் கொடுத்த பணிகளும் டெண்டர் விடப்படாமல் இன்னும் கிடக்கிறது. இப்போது வேறு பணியை எடுக்க அறிவுறுத்துகின்றனர். டெண்டர் குறித்து எங்களுக்கு எந்த முன்அறிவிப்பும் செய்யப்படுவதில்லை. ஒன்றிய கூட்டங்களுக்கு கூட அழைப்பு அனுப்பப்படுவதில்லை.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்: டெண்டர்கள் விடப்பட்டது உண்மை தான், ஆனால், அந்த டெண்டர்களை யாரும் எடுக்காததால் தான் இப்போது மீண்டும். டெண்டர் விடவும், மாற்றுப்பணி கேட்டும் நாங்கள் மாவட்ட ஊராட்சியிடம் கேட்டுள்ளோம். டெண்டர் விடப்படும் தகவல் இனி மாவட்ட கவுன்சிலருக்கு தெரியப்படுத்தப்படும்.
கண்ணதாசன் (தலைவர்): நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனிநடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்ற வகையில் அதிகாரிகள் கவுன்சிலர்களை கட்சிப்பாகுபாடு இன்றி மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு டெண்டர், கூட்டம் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
திருவிகா (அதிமுக): கரூர் மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் முதல் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் வரை உள்ளவர்கள் எந்த பணி கொடுத்தாலும் உள்ளாட்சிகளில் நடப்பதில்லை. டெண்டர்கள் விடுவதில்லை. அதிமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மிரட்டப்படுகின்றனர். பணிகளை செய்யவிடாமல் தடுக்கப்படுகின்றனர், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அது தான் இப்போதுவரை நடந்து வருகிறது.
(இப்படி உறுப்பினர் பேசியதும் திமுக மாவட்ட கவுன்சிலர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்) தொடர்ந்து நடந்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்தின் செலவு குறித்த 3 தீர்மானம் முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது. கூட்டம் முடிவு பெற்று அதிமுக கவுள்சிலர்கள் கூட்ட அறையை விட்டு வெளியேறினர். அப்போது வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வந்தனர். ஆனால் கூட்டம் நிறைவு பெற்றதை அறிந்து விரக்தியோடு மீண்டும் திமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.
அதிமுக கவுன்சிலர்கள் சிலரது வேலைகள் அவர்கள் சார்ந்த பகுதிகளில் முறையாக டெண்டர் விடப்பட்டு நடந்து வருகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக யார் பணியும் நடக்கவில்லை என்று அதிமுக கவுன்சிலர்கள் கூறுவது தவறு யாரும் டெண்டர் எடுக்கவில்லை என்றால் மீண்டும் டெண்டர் விடுவதும் பணியில் வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால், மாற்றுப்பணியை மேற்கொள்வதும் வழக்கமான ஒன்றுதான் என்று திமுக கவுன்சிலர்கள் கூறினர்.