ஏற்காட்டில் கனமழை... மலைப்பாதையில் விழுந்து ராட்சத மரம்... போக்குவரத்து பாதிப்பு
கனமழை காரணமாக சேலம் ஏற்காடு பிரதான மலை பாதையில் ஏழாவது கொண்டை ஊசி வளைவிற்கு மேல் சாலையில் ஓரம் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையில் விழுந்தது.

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வேலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகிறது. அதோடு வெப்ப காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், வளிமண்டலம் மேல் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை சேலம் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சேலம் ஏற்காடு பிரதான மலை பாதையில் ஏழாவது கொண்டை ஊசி வளைவிற்கு மேல் சாலையில் ஓரம் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையில் விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் சாலையில் எந்த வாகனமும் செல்லவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் ஏற்காடு பிரதான சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மரத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகளின் வரத்தை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், ஏற்காட்டில் கனமழை பெய்து வருவதால் கடும் பணி நிலவி வருகிறது. இதனால் ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திற்கு வருகின்ற ஐந்தாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவாகும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

