தமிழகத்தில் வெகு விரைவில் ஆட்சி கலைக்கப்படும் - கே.பி.ராமலிங்கம்
தமிழகத்தில் வெகு விரைவில் ஆட்சி கலைக்கப்படும், இதற்கு ஒரு செந்தில்பாலாஜி போதும் - கே.பி.ராமலிங்கம்
மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கிடும் வகையில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு மத்திய அரசின் சார்பில் சேலம் மாவட்டத்தில் செய்துள்ள பல்வேறு சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது பேசிய அவரிடம், டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டிற்கு உதவுமா? செயல்படுத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நிலையில், எந்த பகுதியில் இருந்தாலும் பணத்தை கொண்டு சேர்க்கும் முடியும் என்பதுதான் டிஜிட்டல் இந்தியாவின் வெற்றி என்று பதில் அளித்தார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர், ”மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு திறந்து வைத்து வருகிறது. தமிழகத்தில் பஞ்சாயத்துகள் இயங்குவதற்கும், பஞ்சாயத்தில் உள்ள அனைத்து பணிகளுக்கும் நிதி மத்திய அரசால் கொடுக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு 2 ஆண்டுகளாக பஞ்சாயத்திற்கு எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை இந்தியாவிலேயே 2014க்கு முன்பு 7 இருந்தது. இன்றைக்கு மதுரையும் சேர்த்து 22 மருத்துவமனைகள் உள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் பட்டினி சாவு என்பது அறவே இல்லை. மலை கிராமங்களில் சூரிய ஒளியை பயன்படுத்திக் கூட பல்வேறு வகையான திட்டங்கள் மூலமாக அனைத்து கிராமங்களுக்கும், சிட்டிசன் திரைப்படத்தை போன்று கிராமமே காணாமல் போய்விட்டது என்பதை சொல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு இல்லாமல் கிராமங்கள் உள்ளது என்று கூறவே முடியாது. சேலம் மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 40 ஆயிரத்து 546 குடும்பங்களுககு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டத்தின் மூலமாக செய்யப்படுகின்ற திட்டம். மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கீழ் 7210 மெட்ரிக் டன் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ தகுதியான மாவட்டம் என்ற பட்டியலில் தமிழகத்தில் சேலம் மாவட்டம் முதலிடம் வந்துள்ளது. எந்த திட்டமாக இருந்தாலும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம், ஊழல் செய்யலாம் என்ற நிலையில் தற்போதைய தமிழகத்தின் ஆட்சியாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் ஆளும் அரசு 30 சதவீதம் கமிஷனுக்காக, பசுமைச் சாலையாக செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதலில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு தற்பொழுது ஆதரவாக செயல்படுகிறார்கள்.
தமிழகத்தில் 85 சதவீத கமிஷன் டாஸ்மாக் கடையின் மூலம் கிடைக்கிறது. மதுபானம் உற்பத்தி விலை 30 ரூபாய் மட்டுமே, ஆனால், ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு 50 ரூபாய் வசூலிக்கிறார்கள். செந்தில் பாலாஜி எல்லாம் ஒரு சயின்டிஸ்ட், தமிழக அமைச்சர்கள் எவ்வளவு பெரிய அறிவாளிகள், விஞ்ஞானிகள். தமிழ்நாடு போன்று ஊழல் மாநிலம் தமிழகத்தில் பார்க்க முடியாது, உலகிலேயே பார்க்க முடியாது. தமிழகத்தில் உள்ள ஐபிஎஸ் போலீஸ் அதிகாரிகள் மறைமுகமாக திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுக்கு வேலையாளாக செயல்பட்டு வருகிறார்கள். சந்து கடையில் மதுவிற்பனை செய்பவர்கள், செந்தில் பாலாஜி வீட்டிற்கு வருமான வரி சோதனைக்கு வந்தபோது கேள்வி எழுப்பினார்கள். தமிழகத்தில் வெகு விரைவில் ஆட்சி கலைக்கப்படும், இதற்கு ஒரு செந்தில்பாலாஜி போதும். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தல் வரும். தமிழகத்தில் வேறு மாவட்டத்திலிருந்து சேலம் மாவட்டத்திற்கு கால்நடை மருத்துவரை இடமாறுதல் செய்வதற்கு 12 லட்சம் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிர்வாக காரணத்துக்காக மாற்றப்படுவதாக கூறும் அனைத்தும் லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் மாற்றுவதாக கூறப்படுகிறது. நாட்டு மக்களுக்கு எது நன்மை பயக்குமே, அதை மத்திய அரசு செய்து வருகிறது. பாஜகவிற்கு எதிரி என்பது திமுக மட்டும் தான். நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் சேர்ந்து வந்தாலும் பாஜகவுக்கு திமுக தான் எதிரி. திமுக தனித்து நிற்க தயாராக இருந்தால் பாஜகவும் தனித்து நிக்க தயார்” என்றார்.