Admk Human Chain Protest: திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
ஆண்டிற்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என்ற உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி சேலம் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 60 வட்டங்களிலும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
40 மாத திமுக ஆட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்தும், ஆண்டிற்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என்ற உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி சேலம் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 60 வட்டங்களிலும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட புதுரோடு பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுக அமைப்பு செயலாளர் சிங்காரம், சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாஜலம், உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான செம்மலை, ஆங்கிலேயர் ஆட்சியின் போது உப்புக்கு வரி விதித்த வெள்ளையர்களுக்கு எதிராக காந்தியடிகள் தண்டியாத்திரை போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டம் வெள்ளையனே வெளியேறு என்று முழக்கங்கள் எழுப்பியது. அதேபோன்று தற்போது சொத்து வரியை பல மடங்கு உயர்த்திய திமுக அரசை 2026 சட்டமன்ற தேர்தலின் போது விரட்டியடித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அரியணை ஏறுவார் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே சொத்து வரி மூன்று மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் வரி உயர்த்துவதுடன், தாமதமாக செலுத்தினால் ஒரு சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்ற உத்தரவு, குதிரை குப்புற தள்ளியதுடன் குழி பறித்தது போன்றது என்று குறிப்பிட்டார். இது திமுக அரசின் நிர்வாக கோளாறு என்று கூறினார்.