சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் - காரணம் என்ன..?
சேலம் மாநகராட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரில் இருந்த கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயரை வைக்க அதிமுக எதிர்ப்பு. எடப்பாடி பழனிசாமியின் பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை.
சேலத்தில் முடிவற்ற பல்வேறு திட்ட பணிகளை வரும் 11 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மறு சீரமைக்கப்பட்டுள்ள பழைய பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா- 2023 மாநகர பேருந்து நிலையம் எனவும், நேரு கலையரங்கத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - 2023 நேரு கலையரங்கம் எனவும், போஸ் மைதானத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - 2023 போஸ் மைதானம் எனவும் பெயர் சூட்டுவதாக தலைமைச் செயலகம் நேற்று அரசாணை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சி அவசர மாமன்ற கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயரில் உள்ள கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் அவசர மாமன்ற கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களுக்கு அவரது பெயரையே வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி கூறுகையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், நேரு கலை அரங்கம் உள்ளிட்டவைகள் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் ஆகும். எனவே இந்த முடிவற்ற பணிகளுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பின்னர் சேலம் மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டத்தில் சீரமைக்கப்பட்ட பழைய பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா- 2023 மாநகர பேருந்து நிலையம் எனவும், நேரு கலையரங்கத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - 2023 நேரு கலையரங்கம் எனவும், போஸ் மைதானத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - 2023 போஸ் மைதானம் எனவும் பெயர் சூட்டுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே சூரமங்கலம் மண்டல குழு தலைவர் கலையமுதன் தனது வார்டில் எவ்வித அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து தரவில்லை எனக் கூறியதால் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய கலையமுதன், "மக்களின் பிரச்சனையை பேசக்கூடிய மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்புவதில் எந்த தவறும் இல்லை. எனது வார்டு மக்களின் அடிப்படை வசதிக்காக குரல் கொடுக்கிறேன்" என்றார். ஆனால் இந்தக் கூட்டமானது முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை மாநகராட்சியில் முடிவுற்ற பணிகளுக்கு பெயர் சூட்ட அனுமதிக்கோரிய கூட்டம் என்று திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றவே மேயர் ராமச்சந்திரன் மாமன்ற கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவித்து கூட்டரங்கில் இருந்து வெளியேறினார்.
மேயர் வெளியேறிய பின்பும் மண்டல குழு தலைவர் கலையமுதன் தொடர்ந்து பேசினார். ஆனால் இதர கவுன்சிலர்கள் அரங்கை விட்டு வெளியேறினர். திமுக மூத்த நிர்வாகியும், சூரமங்கலம் மண்டல குழு தலைவருமான கலையமுதனிடம் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தினால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு நிறைந்து காணப்பட்டது.