"தேர்தல் ஆணையம், காவல்துறை, நீதியரசர்கள் ஈரோடு தேர்தலை ரத்து செய்ய வேண்டும்"- பிரேமலதா விஜயகாந்த்
ஈரோடு கிழக்கு தேர்தலில் அறத்தோடு வாக்களித்தால் தேமுதிக தான் வெற்றி பெறும். ஏனென்றால் கேப்டனின் வழியில் ஜனநாயகத்தோடு செயல்படும் ஒரே கட்சி தேமுதிக.
சேலம் மாவட்டத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தேமுதிக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறோம். தேமுதிகவின் 18 ஆண்டு கால அரசியலில் எத்தனையோ தேர்தல்களை சந்தித்துள்ளோம். ஆனால் இந்த மாதிரி ஒரு தேர்தலை நாங்கள் பார்த்ததே இல்லை. திராவிட மாடல் என்பதை அங்கு தான் பார்த்தோம். தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பது, இலவசமாக பொருட்கள் கொடுப்பது எல்லா தொகுதிகளிலும் நடக்கும் ஒரு விஷயம். ஆனால் ஆடு, மாடுகளை அடைப்பது போல் பட்டறைகளில் மக்களை காலை முதல் இரவு வரை அடைத்து வைக்கின்றனர். இரவு வெளியேறும் போது 500 ரூபாய் கொடுத்து அனுப்பிக்கின்றனர். தேர்தல் அறிவித்தார் நாள் முதல் இன்று வரை இது போன்று நடந்து கொண்டு தான் உள்ளது. இதனை மனவேதனையோடு இங்கு பதிவு செய்கிறேன்.
ஒரு கிளியை அடைத்து வைத்ததற்கு ரோபோ ஷங்கருக்கு ரூபாய் 2.5 லட்சம் அபராதம் அளித்துள்ளனர். இத்தனை ஆயிரம் மக்களை அடைத்து ஓட்டு வாங்குகின்றனர். இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் நல்லது செய்திருந்தால், நாங்கள் நல்லது செய்து இருக்கிறோம் என்று வாக்கு கேட்டிருக்கலாம். இன்றைக்கு திராவிட மாடல் என்பது தெளிவாக ஈரோடு கிழக்கில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்களை பட்டறையில் அடைத்து வைப்பது தான் திராவிட மாடல். திருமங்கலம் ஃபார்முலா, கும்முடிபூண்டி ஃபார்முலா என எத்தனையோ ஃபார்முலாக்கள் உள்ளது. ஆனால் இனிவரும் காலங்களில் ஈரோடு கிழக்கு ஃபார்முலா, பட்டறை ஃபார்முலா திராவிட மாடலை நிரூபித்து இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் கூறும் பதில் எங்களுக்கு மன கஷ்டமாக உள்ளது. ஜனநாயக ரீதியாக அனைவருக்கும் தேர்தல் நடைபெற்றால் இங்கு நடக்கட்டும். ஆட்சி பலம், அதிகார பலம், பணபலம் உள்ளவர்களுக்கான தேர்தல் என்றால் அவர்களை மட்டும் வேட்பாளராக அறிவித்து, அவர்களை ஜெயித்ததாக அறிவித்து விடலாம். .
எங்களைப் போல் உண்மையான கட்சி, நேர்மையான கட்சி எதற்காக இருக்கிறோம். தேர்தல் ஆணையம், காவல்துறை, நீதியரசர்கள் ஈரோடு தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கு மக்களை சந்திக்க விடவில்லை. காலையில் பட்டறையில் அடைத்து வைத்தால் இரவு தான் வெளியே விடுகின்றனர். தேமுதிக அதிமுக போன்ற கட்சியினர் மக்களை சந்தித்து விடக்கூடாது. அதுதான் அவர்கள் ஏய்ம். ஈரோடு கிழக்கு மக்கள் அனைவரும் வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை வண்டிகளும் அங்குதான். தொழில் முடக்கும், 100 கோடி ரூபாய்க்கு நெசவு தொழில் உட்பட அனைத்து தொழில்களும் ஈரோட்டில் முடங்கியுள்ளது. திமுக பிளஸ் ஆக நினைப்பது அப்படியே எதிராக மாறப்போகிறது. திமுக தேர்தல் நேரத்தில் கூறிய எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஒன்றரைக் கால ஆட்சியில் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். இது 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்றார். ஈரோடு கிழக்கு தேர்தலில் அறத்தோடு வாக்களித்தால் தேமுதிக தான் வெற்றி பெறும். ஏனென்றால் கேப்டனின் வழியில் ஜனநாயகத்தோடு செயல்படும் ஒரே கட்சி தேமுதிக தான்” என்று கூறினார்.