Edappadi Palaniswami :"நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு முட்டை வழங்குவார்கள்".. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
2024-ம் ஆண்டில் மட்டுமல்ல 2026-ம் ஆண்டு தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, ”எங்களைப் பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். அதனால் முதலமைச்சர் ஸ்டாலின் பயந்து நடுங்கி வருகிறார். சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்வது போல திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தனர். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு சிறுபான்மை மக்கள் எங்களை சந்திப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் வெறுப்பு பேச்சு பேசி வருகிறார்.
கடந்த இரண்டரை வருட திமுக ஆட்சியில், அதிமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட திட்டங்களைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சேலத்தில் ஸ்மார்ட் சிட்டித் திட்டம், 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். புதிய மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களை திறந்து வைத்து வருகிறார். அத்திக்கடவு-அவினாசி திட்டம் முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியில் இருந்து அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. 90 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக் 10 சதவீத பணியை முடிக்காமல் திமுக ஆட்சியில் கிடப்பில் போட்டுள்ளனர்.
இதேபோன்று, மேட்டூர் அணை உபரிநீர்த் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் ஏரிகளை நிரப்பும் திட்டமும் கிடப்பில் உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் 520 தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 100 சதவீதம் நிறைவேற்றியதாக கூறுவது பச்சைப் பொய். ரேஷன் கடைகளில் 2 கிலோ சர்க்கரை, முதியோர் உதவித் தொகை உயர்வு, கல்விக் கடன் ரத்து, 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்வு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மின்கட்டணம் 12 சதவீதம் முதல் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சாலைவரி, கலால் வரி, வீட்டு வரி என பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. வரிகள் உயர்த்தப்பட்டாலும் அரசின் வருவாய் உயர்த்தப்படவில்லை. இரண்டரை ஆண்டுகளில் இரண்டரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். தேர்தல் அறிக்கையில் நகரப் பேருந்துகளில் முழுமையாக கட்டணமின்றி மகளிர் பயணம் செய்யலாம் என சொல்லிவிட்டு, இப்போது குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டுமே இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் உதவித் தொகை என அறிவித்து விட்டு இப்போது தகுதியானவர்களுக்கு என செயல்படுத்துவது ஏமாற்று வேலை.
திமுகவுக்கு முட்டை:
இதேபோன்று நீட் தேர்வு ரத்துக்கு முதல் கையெழுத்து என சொல்லிவிட்டு ஏமாற்றி வருகிறார். நீட் தேர்வு தொடர்பாக நாங்கள் செய்த்தைத்தான் திமுக செய்து வருகிறது. 2010-ல் நீட் தேர்வினைக் கொண்டு வந்த்து காங்கிரஸ் கட்சிதான். அப்போது திமுக மத்திய இணை அமைச்சராக இருந்த காந்திசெல்வன்தான் அதை அறிமுகம் செய்தார். அவர்களே கொண்டு வந்துவிட்டு இப்போது எதிர்ப்பது போல நாடகமாடுகிறார்கள். இப்போது கையெழுத்து இயக்கம் என மக்களை மீண்டும் தேர்தல் நேரத்தில் ஏமாற்றப் பார்க்கிறார்கள். நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் தெரியும் என கூறிய அமைச்சர் உதயநிதி, இப்போது கையெழுத்து இயக்கம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு முட்டை வழங்குவார்கள்.
அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டப் பகுதியில் மீத்தேன் ஈத்தேன் எடுக்க முடியாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ஆளுநரின் பேச்சு குறித்து கேட்டதற்கு அதுகுறித்த ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு நான் சரியான நபர் அல்ல. தவறான பதில் கொடுத்து விடக்கூடாது. அறிஞர்களைப் பார்த்துத்தான் கேட்க வேண்டும்.
இந்தியா கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா?
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான வலுவான கூட்டணி அமையும். 2024-ம் ஆண்டில் மட்டுமல்ல 2026-ம் ஆண்டு தேர்தலிலும் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கிறார். அதில் கருத்து வேறுபாடு தெரியவில்லை. ஆட்சி அதிகாரத்திற்காக யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைப்பார்கள். கொள்கைக்கும் திமுக கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திமுக சார்பில் அமைச்சர்களை கொண்டு வரப் பார்க்கிறார்கள். அது கட்சியல்ல. கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது. இந்தியா கூட்டணி நிலைக்குமா நிலைக்காதா என்பது குறித்து எதிர்காலத்தில் தான் தெரியும். கொள்ளையடிப்பதற்கும், கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றிக் கொள்வதற்குமே திமுக கூட்டணி அமைக்கிறது.” என பேசினார்.