(Source: ECI/ABP News/ABP Majha)
EPS Speech: "பூவை தேடி தேனீக்கள் வருவதுபோல் அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும்" - இபிஎஸ்
நான் கனவு காணவில்லை, முதல்வர் ஸ்டாலின்தான், பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவர் கனவு பலிக்காது என்று முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதியை சேர்ந்த அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விழா பேரூரை ஆற்றனார். அப்போது அவர் பேசியது, கட்சியில் எவ்வளவோ பொறுப்புகள் இருந்தாலும் அன்றாடும் மக்களை சந்தித்து கட்சியை வலுபடுத்துவது கிளை கழக செயலாளர்கள்தான். அதிமுகவின் வலிமைக்கு காரணம் கிளைக் கழக, வட்ட கழக செயலாளர்கள் தான்.ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு கிளைக்கழக செயலாளர்கள் தான் அடித்தளம் என்று பேசினார்.
அதிமுக என்ற கட்டிடம் வலிமையாக இருக்க அஸ்திவாரமாக அதிமுக நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். கட்சி நிர்வாகிகள்தான் அதிமுக வலிமை பெற்று ஆட்சிக்கு வருவதற்கு தயாராக இருக்கிறது. ஜனநாயக முறைப்படி இருக்கின்ற ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான். சாதாரண தொண்டர் கூட ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும், தலைமை நிர்வாகியாகவும் இதற்கு மேலாக பொதுச்செயலாளராகவும் ஆகலாம் வேறு எந்த கட்சியிலும் ஆக முடியுமா என்று கேள்வி எழுப்பினார். வேறு கட்சிகளில் மிட்டா மிராசுதாரர்கள் தான் பொறுப்புக்கு வரமுடியும். திமுகவில் இருப்பவர்கள் யாரும் உயர்ந்த பதவிக்கு வரமுடியாது; கருணாநிதி உயர் பதவியில் இருந்தார். பிறகு ஸ்டாலின், இவருக்கு பிறகு உதயநிதி பதவிக்கு வந்தார். கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஆண் வாரிசுகள் மட்டுமே பதவிக்கு வரமுடியும். ஆனால் அதிமுகவை பொருத்தவரை அடிமட்ட தொண்டன் கூட பதவிக்கு வரமுடியும் என்றார்.
திமுகவை பொருத்தவரை கருணாநிதி முதல்வராக இருந்தார். அதற்குப் பிறகு ஸ்டாலின், தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக ஆகியுள்ளார். திமுக குடும்பக் கட்சி, வாரிசு அரசியல் எனவும் விமர்சனம் செய்தார். மன்னராட்சி முறையில் தான் இது போன்று குடும்பத்தில் பிறந்தவர்கள் பதவிக்கு வர முடியும். அதேபோன்றுதான் திமுகவில் நடைபெற்று வருகிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட எம்எல்ஏ எம்பி ஏன் முதலமைச்சராக கூட முடியும். அதற்கு நானே உதாரணமாக உள்ளேன். திமுகவில் ஸ்டாலினுக்கு பிறகு நான்தான் முதல்வர் என்று யாராவது கூற முடியுமா? என கேள்வி எழுப்பினர்.
அதிமுக சுதந்திரமாக செயல்படுவதால்தான் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கூட கட்சி மறையவில்லை. அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை. இதனால் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைத்தது. 11 சட்டமன்ற தேர்தலில் 7 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் குறித்து பேசிய அவர், நான் கனவு காணவில்லை. ஸ்டாலின்தான் பகல் கனவு காண்கிறார். நாமக்கல்லில் 2019 எம்பி தேர்தலை காட்டிலும் கடந்த தேர்தலில் வெறும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இதன்மூலம் நாமக்கல்லில் திமுகவிற்குதான் சரிவு அதிமுகவிற்கு அல்ல. நாடாளுமன்றத் தேர்தல் வேறு சட்டமன்ற தேர்தல் வேறு. கூட்டணி இல்லாமல் 10 இடங்களில் அதிமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளது. கூட்டணி இல்லாமல் அதிக வாக்குகள் பெற்ற அதிமுக தான் வலுவான கட்சி எனவும் தெரிவித்தார்.
யாருடைய அழுத்தமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டும் என்பதற்காகவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை. ஆனால் பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களை மறந்துவிட்டனர்.குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் அமைச்சர் பதவி வேண்டும் என்பதே ஸ்டாலினின் எண்ணம் என்றார்.
ஏது ஏதோ மக்களை குழப்பி பொதுமக்கள் மத்தியில் திமுகவிற்குதான் செல்வாக்கு இருப்பது போல தெரிவித்து வருகின்றனர். வறண்ட 100 ஏரிகளுக்கு மேட்டூர் உபரிநீரை கொண்டு நீர் நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுகதான். ஒரு ஆண்டில் நிறைவு பெற வேண்டிய 100 ஏரி திட்டத்தை அதிமுக கொண்டுவந்த திட்டம் என்பதற்காகவே திமுக அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.
பலமுறை சட்டமன்றத்தில் பேசியும் செவுடன் காதில் சங்கு ஊதியது போல இந்த முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. இந்த திட்டத்தை திமுக அரசு முடக்கி வைத்துள்ளதால் இந்த ஆண்டும் கூட மேட்டூர் அணை உபரிநீர் வீணாக கடலில் கலந்தது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் இத்திட்டத்தை நிறைவு செய்வோம் எனவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்றார்கள். ஆனால் 41 மாதங்களாகியும் அதனை செய்யவில்லை. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை தற்போது வரை உதயநிதியால் கண்டுபிடிக்க முடியவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தற்போது வரை நிறைவேற்றவில்லை.ஜனாதிபதியிடம் கொடுப்பதாக கூறி மக்களிடம் வாங்கிய கையெழுத்துக்கள் சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் திமுகவினர் காலடியில் விழுந்து கிடந்தது. மக்களை ஏமாற்றுவதே திமுகவின் வேலை.
ஆனால் அதிமுக 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததால் 3340 பேர் மருத்துவராகின்றனர். இதுதான் சாதனை. இதுபோல திமுக ஒரு சாதனையையாவது சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினர். சேலத்தில் மட்டும் இந்த ஆண்டு 72 பேர் மருத்துவராகின்றனர்.அதிமுக எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது; திமுக ஒரு சாதனையாவது செய்துள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை சேலத்தில் கட்டினோம். அதனை திறந்தால் அதிமுகவிற்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதற்காகவே திமுக அரசுக்கு அதனை திறக்க மனமில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் நாங்களே அதனை திறப்போம்.மக்களின் வரிப்பணத்தில் கட்டிய கட்டிடங்களில் என்ன அரசியல் பார்ப்பது. அதிமுக கொண்டு வந்த மக்கள்நல திட்டங்களை கிடப்பில் போட்டதற்கு திமுக ஒருநாள் மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.
நாமக்கல் மாவட்டத்திற்கு நிறைய திட்டத்தை கொண்டு வந்தது அதிமுகதான். திமுகவின் 41 மாத ஆட்சியில் 40 கோடிதான் ஒதுக்கி உள்ளனர். அதிமுக ஆட்சியில் நாமக்கல் மாவட்டத்திற்குதான் அதிக நிதியை ஒதுக்கி பணிகளை செய்துள்ளோம். கனவு உலகத்தில் மிதக்கும் முதல்வர் நாமக்கல் மாவட்டத்திற்கு திமுகதான் நிறைய திட்டங்களை கொடுத்துள்ளதாக பொய்யான தகவலை தெரிவித்து சென்றுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக செய்துள்ள திட்டங்களை நான் புள்ளி விபரத்தோடு சொல்வேன்.முதல்வருக்கு பேப்பரை பார்த்து படிக்கத்தான் முடியும்; என்னை போல புள்ளி விபரங்களை சொல்ல முடியுமா? என பேசினார்.
நெஞ்சை நிமிர்த்தி மக்களை சந்திக்க திராணி உள்ள ஒரே கட்சி அதிமுகதான்.நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் ஒன்றும் செய்யாதது போல பேசும் ஸ்டாலின் இப்போதாவது உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.நாடு முழுவதும் பேசும் ஆட்சி அதிமுக ஆட்சிதான். உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரலாம். ஒன்றிய பகுதிகளில் நிர்வாகிகள் கடுமையாக உழைத்து அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.அதிமுகவின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்து சொன்னாலே போதும் அதிமுக வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றார்.
திமுக கூட்டணி, வலுவான கூட்டணியாகவே இருந்துட்டு போகட்டும். திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று நான் சொல்லவில்லை கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளே சொல்கிறார்கள். அதைதான் நான் வெளிப்படுத்துகிறேன். அதிமுகவுடன் கூட்டணி வைக்க யாரும் வரவில்லை என்று திமுக அமைச்சர் ஒருவர் பேசியிருந்தார். ஆனால் தேசிய கட்சியே எங்களை கூட்டணிக்கு அழைத்தது. ஆனால் அதிமுகவிற்கு ஆட்சி, அதிகாரம் முக்கியமில்லை. மக்களுக்கு சேவை செய்வதே அதிமுகவின் நோக்கம் என்றும் கூறினார்.
ஒரு சின்ன குட்டி கதையை கூறிய எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பூவை தேடி தேனிக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும். ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும்; 2026 அதிமுக வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தில் சிறந்த ஆட்சியை அதிமுகவால்தான் தர முடியும் என்றார்.
2021ல் மொத்தமாகவே ரூ.5.18 லட்சம் கோடி கடன்தான் இருந்தது. தமிழகத்தை அதிமுக கடனாளி ஆக்கி விட்டதாக கூறி வல்லுநர்கள் குழுவை அமைத்த திமுக அரசு புதிதாக ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது.கொரோனா காலத்தில் 1 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு. 40,000 கோடி செலவு இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் கடுமையான வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம், கலால் வரி, ஜிஎஸ்டி என 56 ஆயிரம் கோடி என பலவகைகளில் அரசுக்கு கூடுதலாக வருவாய் வந்தும் கூட ஏன் 3 லட்சம் கோடி கடன் வாங்கினார்கள். ஸ்டாலினை போல் நான் பொம்மையாக இருக்கமாட்டேன். அரசுக்கு வரும் வருவாய் முழுமையாக எனக்கு தெரியும்.அறிவிப்பது எல்லாம் சாதனையா? என்று கேள்வி எழுப்பிய அவர், இந்தியாவிலேயே ஒரே திட்டத்திற்கு ரூ.67ஆயிரம் கோடி மத்தியில் இருந்து நிதி பெற்றது அதிமுக அரசு தான் எனவும் கூறினார்.
அறநிலையத்துறையில் இருந்து வருமானம் வருவதை பார்த்து 10 கல்லூரிகளை உருவாக்கி செலவு செய்து வருகின்றனர். திமுகவினருக்கு விஞ்ஞான மூளை. அறநிலையத்துறை வருமானம் கோவில்களுக்குதான் செலவு செய்ய வேண்டும்.சாமி பணத்தை கூட விட்டு வைக்கவில்லை. இதனை 2026ல் இந்த சாமி வந்து கேட்பார் என அதிரடியாக பேசினார்.
2026ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் எத்தனை அமைச்சர்கள் மீது வழக்கு வருகிறது என்று பாருங்கள் எனக் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறையில் ஊழல் செய்ததாக திமுக கட்சியை சேர்ந்த அமைப்பு செயலாளர் நீதிமன்றத்திற்கு சென்றார். பிறகு அவரே அந்த வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என்றார். ஆனால் நான் அந்த வழக்கை எதிர்கொண்டு நிரபராதி என்று நிரூபித்தேன்.திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடத்திற்கு ரூ.230 கோடிக்கு டென்டர் விட்டுவிட்டு ரூ.410 கோடி செலவு செய்துள்ளார்கள். சிறு வயதில் இருந்து பல வழக்குகளை சந்தித்து வெற்றி பெற்றவன் நான். போட்ட வழக்கை திரும்ப பெறுபவன் அல்ல. தலைமை செயலக கட்டிட ஊழல் வழக்கை எதிர்கொள்ள ஸ்டாலினுக்கு திராணி இருக்கா? திமுக ஊழல் கட்சி என விமர்சனம் செய்தார்.
அதிமுக தொண்டனை கூட உண்ணால் தொட்டு பார்க்க முடியாது ஸ்டாலின். அதிமுகவை குறைத்து மதிப்பிட்டுவிட்டு உங்களால் நிம்மதியாக இருந்துவிட முடியாது எனவும் எச்சரித்தார்.