அமித்ஷா குறித்த கேள்வி, "ஜெயக்குமார் கருத்துதான் என்னுடைய கருத்து" நழுவி சென்ற இபிஎஸ்
அமைச்சர் ரகுபதிதான் இருக்கும் கட்சிக்கே விசுவாசமாக இருக்க மாட்டார், அவர் பேச்சையெல்லாம் தான் பொருட்படுத்துவது கிடையாது எனவும் தெரிவித்தார்.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.ஜே.கே, திமுக, பாமக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் உரிய மரியாதை நிச்சயம் கிடைக்கும் என்றார். மேலும் நல்ல திட்டங்களை தொடர்வதுதான் சிறந்த அரசுக்கு அழகு. நல்லது செய்வதை பிடிக்காத திமுக ஏழைகளுக்கு வைத்தியம் செய்வதை கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட அதிமுக கொண்டு வந்த அற்புதமான திட்டங்களை முடக்கி விட்டது என்று சாடினார். மேலும், ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்த திமுக, வெற்றி பெற்று தற்போது வரை ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை. அதிமுக ஆட்சி தற்போது இருந்திருந்தால் வசிஷ்ட நதியின் குறுக்கே பல தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கும் என்றார்.
விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் பெற வேண்டும் என்பதற்காக தலைவாசலில் ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட கால்நடை பூங்காவை அதிமுக திட்டம் கொண்டு வந்தது. ஆனால் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாகவும், கட்டப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியும் திறக்க முதலமைச்சருக்கு மனமில்லை எனவும் குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி கால்நடை பூங்காவை திறப்பதில் முதல்வருக்கு என்ன கஷ்டம் என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு ஆசிரியர்கள் மூலமே பாதுகாப்பு இல்லாத சூழல்தான் தற்போது நிலவுவதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகுவதால் தான் பல்வேறு குற்றங்கள் நடப்பதாக சுட்டிக்காட்டினார். கஞ்சா போதைக்கு அடிமையானவர்களை எளிதில் மீட்டெடுக்க முடியாது என்றும் துவக்கத்திலேயே போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தாமல் தற்போது போதைப்பொருள்கள் புழக்கம் தமிழகம் முழுவதும் சூழ்ந்த பிறகு அதனை கட்டுப்படுத்த தற்போதுதான் அரசு நடவடிக்கை எடுக்கிறது என்றார்.
திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்தியதுதான் திமுக ஆட்சியின் சாதனை. திமுக அரசுக்கு எப்ப பார்த்தாலும் விளம்பரம்தான் என்றார். புதிய திட்டங்களுக்கு குழு அமைப்பதோடு சரி அதை செயல்படுத்துவதே கிடையாது என்று கூறினார். மேலும் கூட்டணியை நம்பியே திமுக உள்ளதாகவும் திமுகவை நம்பி அதன் கூட்டணி கட்சிகள் இல்லை என்றும் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி அதிமுக, அதிமுகவை நம்பியே தேர்தலில் நிற்பதாகவும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணி நிச்சயம் அமையும் என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ரகுபதி தான் இருக்கும் கட்சிக்கே விசுவாசமாக இருக்க மாட்டார். அவரது பேச்சை எல்லாம் தான் பொருட்படுத்துவது கிடையாது என்றார். அம்பேத்கரை இழிவுப்படுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய விவகாரம் குறித்த கேள்விக்கு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துதான் என்னுடைய கருத்து என்று தெரிவித்தார்.