மேலும் அறிய
தருமபுரி: போலீஸ் எனக்கூறி போலீஸ்காரிடமே மாமுல் வசூலிக்க முயன்ற நபர் கைது
’’பட்டதாரியான தம்பிதுரை எந்த வேலைக்கும் செல்லாமல், இதுப்போன்று அதிகாரிகள் என கூறி, பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து ஜாலியாக சுற்றி திரிந்து வந்துள்ளார்’’

கைது செய்யப்பட்ட தம்பிதுரை
தருமபுரியில் காவலராக பணிபுரிந்து வரும் பாக்கியராஜ் என்பவர், பணி முடித்துவிட்டு தனது சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜ்பால் கவுண்டர் பூங்கா அருகே நின்றிருந்த ஒருவர் திடீரென காவலர் பாக்கியராஜ் வண்டியை தடுத்து நிறுத்தியுள்ளார். தொடர்ந்து விதி மீறல் என கூறி, 200 அபராதம் கேட்டுள்ளார். இதனையடுத்து பாக்கியராஜ், தானும் காவலர் தான் என கூறியுள்ளார். அப்பொழுது அவர் தான் நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறேன், அபராதம் இல்லையென்றால், வழக்கு பதிவு செய்வேன் என கூறியுள்ளார்.
அப்பொழுது காவலர் பாக்கியராஜ், நான் உங்களை இதுவரையில் பார்த்ததே இல்லை என கூறியுள்ளார். அப்பொழுது உளவு பிரிவில் பணியாற்றுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல் பாக்கியராஜ், அருகில் காவலரை வரவழைத்து, அவரை பிடித்து சென்று தருமபுரி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து காவல் துறையினர் விசாரணையில், அவர் அரூர் அடுத்த மருதிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டதாரியான தம்பிதுரை என்பது தெரியவந்தது. மேலும் தம்பிதுரை பல்வேறு மாவட்டங்களில், தான் ஒரு குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருவதாக கூறி தங்கும் விடுதி, உணவகங்கள், இரவு நேரங்களில் வரும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறி செல்வதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். மேலும் இருசக்கர வாகனங்களில் வரும், பொதுமக்களிடம் சாலையில் நின்று கொண்டு ஓட்டுநர் உரிமம், தலைகவசம் அணியாமல் வருவது, காப்பீடு என ஆவணங்களை கேட்டு இருசக்கர வாகத்தை சோதனை செய்தல், போக்குவரத்து விதிகளை மீறியதாக மிரட்டி பணம் வசூல் செய்ததும் தெரியவந்தது.

மேலும் செல்போன் திருடிய வழக்கு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதும், சிறை சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து பட்டதாரியான தம்பிதுரை எந்த வேலைக்கும் செல்லாமல், இதுப்போன்று அதிகாரிகள் என கூறி, பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து ஜாலியாக சுற்றி திரிவது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவலர் என கூறி, காவலரையே மிரட்டி பணம் பறிக்க முயன்ற தம்பிதுரை மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தருமபுரி நகரில் காவலரையே மிரட்டி பணம் பறிக்க முறன்ற சம்பவம் காவல் துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















