திருப்தி இல்லை என குறிப்பிட்ட சான்றிதழ்.. பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சை..
சான்றிதழில் திருப்தி இல்லை என பதிவிட்ட நிலையில் நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் 2020 - 2022 ஆம் ஆண்டு வரலாற்று துறையில் 8 மாணவிகள் உட்பட 9 பேர் முதுகலை பட்டதாரி மாணவர்கள் படித்து முடித்தனர். இந்த நிலையில் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகத்திடம் சான்றிதழ் கேட்டுள்ளனர். இதையடுத்து பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் நான்கு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழில் திருப்தி இல்லை என பதிவு செய்து வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து மாணவர்கள் நேற்று துறை தலைவர், பேராசிரியர் மற்றும் பதிவாளரை சந்தித்து முறையிட்டனர். ஆனால் பலனளிக்காமல் போனதால் நேற்று துணைவேந்தர் அலுவலகம் எதிரே பெற்றோர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அழைத்து அவர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய பின்னர் அதை கொண்டு துணைவேந்தருக்கு அனுப்பி நட்பெயர் கொண்ட சான்றிதழ் வழங்க கோரிக்கை வைக்கப்படும் என அவர்களுடன் சமாதானம் பேசினார். இதையடுத்து அவர்கள் மன்னிப்பு கடிதத்தை எழுதி பதிவாளரிடம் கொடுத்துவிட்டு சென்றனர். சான்றிதழில் திருப்தி இல்லை என பதிவிட்ட நிலையில் நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஆனால் இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது, கடந்த ஆண்டு வரலாறு துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் மீது மாணவி ஒருவர் சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பேராசிரியர் புகார் அளித்தது தெரிந்து தலைமுறைவாகிவிட்டார். சில நாள் கழித்து அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஆனால் வரலாறு துறை மாணவர்கள் பேராசிரியருக்கு ஆதரவாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் பேராசிரியர் மீது பொய்யான வடக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மிகவும் நல்லவர் எனவும் மாணவர்கள் கூறினார்.
இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புகார் அளித்த மாணவி புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார். இதனால் கைது செய்யப்பட்ட பேராசிரியர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். பாலியல் புகார் குறித்து விசாரணை செய்த போது, சம்பந்தப்பட்ட பேராசிரியர் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து கல்லூரியில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் தெரிவித்ததாகவும், அதற்காக பேராசிரியர்கள் ஒன்றிணைந்து அவர் மீது ஒரு மாணவியை கொண்டு பாலியல் புகார் அளித்ததாக தெரிவித்திருந்தனர் எனவும், தற்போது சான்றிதழில் திருப்தி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ள மாணவிகள், பேராசிரியர் கைதின்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த மாணவிகள் எனவும் இதனை நினைவில் வைத்து இது போன்று நடவடிக்கையை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், படிப்பை முடித்து ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில் சான்றிதழ் வழங்காததால் மேற்படிப்பிற்கு செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மாணவர்களுக்கு சான்றிதழ் தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தொடர்ச்சியாக ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு, தொலைதூர கல்வியில் முறைகேடு, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு, வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வி என பல்வேறு புகார்களில் சிக்கி வரும் பெரியார் பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளது.