Campfire Ban: கேம்ப் ஃபயர்க்கு தடை... ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு... முழு விவரம் இதோ
கோடை காலத்தை முன்னிட்டு வனப் பகுதிகளில் எளிதில் தீப்பற்றும் நிலை ஏற்படும் என்பதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்காட்டில் கேம்ப் ஃபயர்க்கு தடை விதிக்கப்படுகிறது.

கோடை காலம் துவங்கியுள்ளதையொட்டி சேலம் மாவட்டத்தில் ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வன தீ ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடத்தப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஏற்கனவே மாவட்ட வனக்குழு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வன தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, கருமந்துறை, சேர்வராயன், பாலமலை, கஞ்சமலை, ஜருகுமலை, நகரமலை, சூரியமலை, பச்சமலை, கல்ராயன்மலை, கூடமலை மற்றும் பிற காப்புக்காடுகள் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் கோடைக்காலங்களில் வன தீ ஏற்படாத வகையில் வனத்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் சேலம் மற்றும் ஆத்தூர் வனக் கோட்டப் பகுதிகளில் முன்னேற்பாடு தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வன தீ ஏற்படும் நிகழ்வுகளை கண்காணித்து தகவல் தெரிவிக்கும் வகையில் வன பாதுகாவலர்கள், வன காவலர்கள், தீயணைப்புத்துறையினர் மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து வனத் தீ கண்காணிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டு இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீ தடுப்பு நடவடிக்கைகளை மேலும் விரைவுபடுத்தும் வகையில் தொடர்புடைய துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அடர் வனப்பகுதிகளில் வனத் தீ ஏற்படாதவாறு கண்காணிக்கும் வகையில் சேலம் வனக்கோட்டத்திற்கு 4 ட்ரோன் கேமிராக்கள் மற்றும் ஆத்தூர் வனக் கோட்டத்திற்கு ஒரு ட்ரோன் கேமிரா என 5 ட்ரோன் கேமிராக்கள் மூலம் தற்போது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கோடை காலத்தை முன்னிட்டு வனப் பகுதிகளில் எளிதில் தீப்பற்றும் நிலை ஏற்படும் என்பதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்காட்டில் கேம்ப் ஃபயர்க்கு தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறுவோர் மீது பாதுகாப்பு நலன் கருதி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுடன் சேர்ந்து தீயணைப்புத்துறை சார்பாக தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர். ஏற்காடு, கருமந்துறை போன்ற மலைப்பகுதிகளுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளிடம் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்லாமல் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காய்ந்த விவசாய மிச்சங்களை எரிக்க கூடாது. வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ளவர்களிடம் வன தீ விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்து போதுமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வனப்பகுதிகளில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீ தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திடவும், கோடை காலம் முடியும் வரை வனப்பகுதிகளில் வனத்துறையினர் தொடர் ரோந்துப்பணி கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்காடு, கருமந்துறை ஆகிய இரண்டு மலைப்பகுதிகளிலும் தீயணைப்பு மீட்புப்பணி நிலையங்கள் உள்ளது. இத்தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்களான ஏற்காடு 73050 95785 மற்றும் கருமந்துறை 04292 244803 மற்றும் 7550396101 ஆகிய எண்களை பொதுமக்கள் எளிதாக அழைக்கும் வகையில் பொது இடங்களில் காட்சிப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காட்டுத் தீ தொடர்பான தகவல்களை உடனடியாக 0427 2415097 மற்றும் 1800 599 0427 என்ற கட்டணமில்லா சேவை எண்ணிலோ அல்லது மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தகவல் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், வன விலங்குகள் கோடைகாலத்தில் விளை நிலங்களுக்குள் தண்ணீர் தேடி வருவதை தடுக்கும் வகையில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. கோடை காலங்களில் அரசால் தெரிவிக்கப்படும் வன பாதுகாப்பு நடவடிக்கைகளை சுற்றுலாப் பயணிகள், வனப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் பின்பற்றி வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

