EPS Speech:"அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் கிடையாது; நாம்தான் வாரிசு”: எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் அதை நிறைவேற்றி காட்டியவர்கள் எம்ஜிஆர் , ஜெயலலிதா என பெருமிதம் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலகவுண்டன்புதூர் பகுதியில் அதிமுக ஓமலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.எஸ்.கே.ஆர்.ராஜேந்திரனால் உருவாக்கப்பட்ட இலவச முதியோர் காப்பகத்தை மற்றும் இலவச இறகு பந்து விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். முன்னதாக ஓமலூர் சென்ற அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இலவச ஆதரவற்ற முதியோர் இல்லத்தை திறந்து வைத்து அங்குள்ள முதியோர்களுக்கு உணவுகளை பரிமாறினார். பின்னர், இறகு பந்து மைதானத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்த மாணவர்களுடன் இறகுப்பந்து விளையாடினார்.
இதைதொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசிய போது, “ஒவ்வொருவரும் தாய் தந்தையரை தெய்வமாக மதிக்கவேண்டும், அப்பொழுதுதான் வாழ்க்கையில் ஏற்றம் பெறுவோம், குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். நோய் நொடி இல்லாமல் எல்லாம் வாய்ப்பும் கிட்டும். ஒரு சிலர் தாய், தந்தையரை எதிரியாக நினைக்கிறார்கள். தாய் தந்தையர்களை மறந்து ஆதரவளிக்காமல் விட்டுவிடும் நிலையில் வாழவழியில்லாமல் இப்படிப்பட்ட முதியோர் இல்லம் ஆதரவாக இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் ஏழை மக்கள் ஏற்றம் பெறவேண்டி வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். ஏழை என்றசொல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கொள்கை லட்சியம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். அதை நிறைவேற்றி காட்டியவர்கள் எம்ஜிஆர் , ஜெயலலிதா. அந்த வழியில் வந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சி நிர்வாகிகள்தான் ஏழைகளுக்கு உதவி வருகின்றனர்” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசியவர், ”அறிஞர் அண்ணாவிற்கு குழந்தைகள் கிடையாது. எம்ஜிஆருக்கு குழந்தைகள் கிடையாது, புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் கிடையாது. அவர்களுக்கு நாம் தான் குழந்தைகள். அவர்கள் எண்ணங்களை வாரிசாக நிறைவேற்றி வருகிறோம். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உழைக்கும் திறனற்ற முதியோர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் அறிவிப்பை வழங்கி ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கியவர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று தெரியபெற்றவுடன், தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்து, கிட்டத்தட்ட நான்கரை லட்சம் முதியோர் உதவி தேவைகள் வழங்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக அரசு வந்தவுடன் உழைக்கும் திறனற்ற ஏழை முதியோர்களுக்கு வழங்கிய முதியோர் உதவித் தொகையை நிறுத்தியது.” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னால் அமைச்சர் செம்மலை, சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஓமலூர், ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.