கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் - முன்னாள் அமைச்சர் செம்மலை
கள்ளக்குறிச்சி கள்ளச்சார விவகாரத்தில் உயிரிழப்பு அதிகரித்ததற்கு காரணம், நச்சு முறிவு மருந்து இல்லாததே. சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை நிலை வெளிவரும்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிர் இழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி அதிமுக மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்று நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செம்மலை கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று விடியா திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை, "திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்றார்கள். ஆட்சிக்கு வரும்போது போதையில்லா மாநிலமாக மாற்றுவோம் என்றார்கள். தமிழகத்தில் இளம் விதவைகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்றும் கூறினார்கள். ஆனால் இன்று கள்ளசாராயத்தால் 58 பேர் தாலி பறிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கள்ளச்சாராயம் தொடர்பாக சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி வழங்கியிருந்தால் கள்ளசாராயத்தை தடுக்க எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு ஆலோசனை வழங்கி இருப்பார். கள்ளச்சாராய வியாபாரிகளும், விற்பனையாளரும் மனம் திருந்தினால் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக மாற்று தொழில் செய்வதற்கு வழிவகை செய்தது அதிமுக அரசு. தனது மாநிலத்தில், கள்ளசாராயத்தால் பலர் உயிரிழந்ததை அறிந்தவுடன் முதலமைச்சர் அங்கு அவர் சென்றிருக்க வேண்டாமா. ஏற்கனவே மரக்காணத்தில் 28 பேர் உயிரிழந்தபோது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு உயிர் இழப்பு ஏற்பட்டிருக்காது. கள்ளசாராய சம்பவத்தில் அண்டை மாநிலத்தில் இருந்து மெத்தனால் வாங்கி இருப்பதாக தகவல். இதில் மற்ற மாநிலங்களும் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். டாஸ்மாக் கடை நடத்தும் அரசு, குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருவது போல், கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் விற்கும் நபர்கள் அங்குள்ள குடும்பத்தினருக்கு குறிப்பிட்ட தொகையை வழங்குகின்றனர். கள்ள சாராய சம்பவத்தில் ஆளுங்கட்சிணரே உடந்தையாக இருப்பதால் சிபிசிஐடி விசாரணை நடத்தினர் அது சரியாக நடைபெறாது. ஆட்சியாளர் என்பவர் மருத்துவர் போல் செயல்பட வேண்டும். நோயாளியின் நோய்க்கு தகுந்தவாறு மருந்துகள் வழங்கி அவரை காப்பாற்ற வேண்டும். ஆனால் இன்றைய ஆட்சியாளரோ நோயாளியை காப்பாற்றுவதற்கு பதிலாக நேரடியாக பிரேத பரிசோதனை செய்கின்றனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் மருத்துவர் போல் செயல்படுகிறார்" என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் செம்மலை, "கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு காரணம் அதற்கான மருந்து தட்டுப்பாடு உள்ளதே என்று கூறினார். கள்ள சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்க பட்டிருந்த மருத்துவமனைகளில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவமனையில் தான் இறப்பு எண்ணிக்கை குறைவு என்றும் அங்கு குணமானவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும் தெரிவித்ததுடன் மற்ற அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் உயிரிழந்ததற்கு போது பிசோல் என்ற நச்சு முறிவு மருந்து இல்லாததே காரணம் என்றார். ஆனால் போதுமான அளவு மருந்து உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறும் போது மருத்துவர்களும் அதையேதான் வழிமொழிவார்கள். இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டால் உண்மை வெளிவராது என்றும், சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே மருந்து இல்லாத்து குறித்த உண்மை வெளிவரும்" என்று தெரிவித்தார்.