Flood Alert:மேட்டூர் அணையில் இருந்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..
மேட்டூர் அணை இன்று மதியம் நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு 53,000 கன அடியாக உள்ளது.
கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மதியம் 12 மணிக்கு நிலவரப்படி120.100 அடியே எட்டியுள்ளது. மேட்டூர் அணை இன்று மதியம் நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு 53,000 கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.63 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 47,000 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 70,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்து அதிகம் உள்ளதால் எந்நேரத்திலும் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்றும், திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவில் இருப்பதால் அணைக்கும் வரும் நீர் மொத்தமும் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட இருக்கிறது. உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்படும் என்பால் காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வளிமண்டல கீழ் சுழற்சி காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவேரி கரையோரத்தில் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு தந்தூரம் போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தடையை மீறி காவேரி ஆற்றல் இறங்குவோர் மீது கொடும நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவிரிக் கரையில் அமைந்துள்ள சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறையினருக்கு மேட்டூர் அணையில் இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.