தமிழகத்தில் 2000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை - அச்சத்தில் மக்கள்..
செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஓராண்டை கடந்தும் உலக அளவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சுமார் 8 மாதங்கள் கழித்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும் இன்றளவும் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுமார் 2 மாதகால இடைவெளிக்கு பிறகு, மீண்டும் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நேற்று (மார்ச் 27) 2,089 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 775 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் நால்வர் உள்பட நேற்று தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தபிறகு மீண்டும் தமிழகத்தில் லாக்கடவுன் அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.