அவசரமாக தரையிறங்கியது சோனியா காந்தி பயணித்த விமானம்.. நடந்தது என்ன?
விமானம் அவசரமாக போபாலில் தரையிறங்கியபோது, விமானத்தில் சோனியா காந்தி ஆக்சிஜன் மாஸ்க் அணிந்திருந்த புகைப்படத்தை ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.
ராகுல் காந்தி, சோனியா காந்தி சென்ற விமானம், சிறு தொழில்நுட்ப தேக்கத்தின் காரணமாக போபாலில் தரையிறங்கியபோது, விமானத்தில் சோனியா காந்தி ஆக்சிஜன் மாஸ்க் அணிந்திருந்த புகைப்படத்தை ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துக்கு கேப்ஷனாக, “Ma, Grace Under Pressure" என்பதை பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் பணியில், காங்கிரஸில் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 23-ஆம் தேதி பாட்னாவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதி அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீதாராம் யெச்சூரி, லாலு பிரசாத் யாதவ், உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்ட 26 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (I-N-D-I-A) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என பொருள்படும் பெயர் வைக்கப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தை முடித்துக்கொண்டு பெங்களூருவில் இருந்து ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி டெல்லி புறப்பட்டனர். எதிர்க்கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, "இந்தக் கூட்டத்தில் நான் கலந்துகொள்வது பெருமையாக இருக்கிறது. இந்தியா என்ற கருத்தாக்கம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. கோடிக்கணக்கான இந்தியர்களின் குரல் பறிக்கப்படுகிறது.
இது இந்தியாவின் குரலை மீட்டெடுப்பதற்கான போராட்டம். அதனால்தான், இந்த பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளோம் - இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) இது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் - இந்தியாவுக்கும், நரேந்திர மோடிக்கும் - இந்தியாவுக்கும், அவர்களின் சித்தாந்தத்துக்கும்- இந்தியாவுக்கும் இடையேயான போர்தான் இது" என்றார்.