BJP PM Modi: ”பாஜகவிற்கு ஏது வாக்கு வங்கி? 150 சீட்டு கூட தேறமாட்டீங்க” RSS-க்கே ஸ்கெட்ச் போடும் மோடி?
BJP PM Modi: பிரதமர் மோடி இல்லாவிட்டால் பாஜக 150 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது என, அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே எச்சரித்துள்ளார்.

BJP PM Modi: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் 75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என்ற விதியை, மோடிக்காக வளைக்க அவரது ஆதரவாளர்கள் காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது.
ஓய்வு பெற வலியுறுத்தல்:
ஆர்எஸ்எஸ் மற்றும் அதனை அடிப்படையாக கொண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்த பாஜகவில், 75 வயதை எட்டும் தலைவர்கள் பதவிகளில் இருந்து விலகி அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்பது விதியாக உள்ளது. அந்த வகையில் தான் எல்.கே. அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டனர். இதில் பிரதமர் மோடி மற்றும் தற்போதைய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆகியோருக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், வரும் செப்டம்பர் மாதத்துடன் மோடிக்கும் 75 வயதாவதால், அவரும் பதவி விலகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சி விதிகளை யாராக இருந்தாலும் பின்பற்ற வேண்டும், அது எனக்கும் கூட பொருந்தும் என அண்மையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அண்மையில் பேசி இருந்தார். அது மோடிக்கான நேரடி அழுத்தமாகவே கருதப்படுகிறது.
”பாஜகவிற்கு தான் மோடி வேண்டும்”
இந்நிலையில் தான் உத்தராகண்டை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான நிஷிகாந்த் துபே, கட்சியின் விதிகள் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது, “பிரதமர் மோடிக்கு பாரதிய ஜனதா கட்சி தேவையில்லை. ஆனால், அதேநேரம் பாரதிய ஜனதா கட்சி உயிர் வாழவே மோடியை தான் சார்ந்துள்ளது. வரும் 2029ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது மோடி இல்லாமல் பாஜக போட்டியிட்டால், கட்சி 150 இடங்களுக்கு சரிந்துவிடும். அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மோடி இல்லாத பாஜகவை என்னால் பார்க்க முடியவில்லை. அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு அவரை மட்டுமே என்னால் தலைவராக பார்க்க முடிகிறது.
”பாஜகவிற்கு வாக்கு வங்கியே இல்லை”
பிரதமர் வேட்பாளராக வந்தபோது பாஜகவிற்கு என வாக்கு வங்கி என்பதே இல்லை குறிப்பாக ஏழை மக்களிடம் இருந்ததே இல்லை. ஆனால், பிரதமர் மோடி மீது கொண்ட நம்பிக்கையால் அவர்களது கவனம் பாஜக பக்கம் திரும்பியுள்ளது. சிலருக்கு இது பிடிக்கலாம், சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம். ஆனால் அது தான் உண்மை. ஒரு கட்சி சேவகராக பாஜகவிற்கு மோடி வேண்டும். அவரது தலைமைத்துவம் தேவை என நான் நம்புகிறேன். அவரது உடல் அனுமதிக்கும் வரை அவர் தலைமை வகித்தால் மட்டுமே, வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நம்மால் 2047ம் ஆண்டு எட்டமுடியும்.” என நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ்-க்கே ஸ்கெட்ச் போடும் மோடி டீம்?
பாஜக எனும் கட்சி எந்த ஒரு தனிநபரையும் சார்ந்தது இல்லை என்பதை உணர்த்த அடிக்கடி பல அதிரடி முடிவுகளை அக்கட்சி தலைமை எடுத்துள்ளது. ஆள் அடையாளம் தெரியாத நபர்களை முதலமைச்சராக்குவது, அமைச்சரவையில் இடம்பெற செய்வது, கட்சிக்கு நல்லது என்றால் முதலமைச்சராக இருப்பவரை கூட ஓரங்கட்டுவது என எதிர்பாராத முடிவுகளை பாஜக எடுத்துள்ளது. இதன் மூலம் எந்தவொரு தனிநபரை காட்டிலும் கட்சியே முதன்மை என்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மோடி விவகாரத்தில் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்பதையே தற்போதைய சூழல் நிலவுகிறது.
மோகன் பகவத்தின் பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தாலும், அவரது ஆதரவாளரான நிஷிகாந்த் துபே அதற்கு எதிராக காட்டாமாக பேசியுள்ளார். அதாவது மோடி தான் பாஜக, அவர் இல்லாவிட்டால் பாஜகவே இல்லை என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனிமனிதனை சார்ந்து கட்சி இருக்கக் கூடாது என்ற, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் கொள்கைக்கு எதிராக பாஜக நகர்ந்து வருகிறது. மோடியின் அனுமதி இன்றி நிஷிகாந்த் துபே இப்படீ பேச வாய்ப்பு இல்லை என்றே கட்சியினரே தெரிவிக்கின்றனர். அதன்படி, 75 வயதை கடந்த பிறகும் மோடி பதவியில் தொடர விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் Vs மோடி
அன்று அத்வானி,முரளி மனோஹர் ஜோஷிக்கு ஒரு நியாயம் கற்பித்த மோடி தான், இன்று தனக்கென வரும்போது விதிகளையே மாற்ற பார்ப்பதாக ஆர்எஸ்எஸ் தரப்பினர் குறிப்பிடுகின்றனர். 2014 மற்றும் 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது தனிப்பெரும்பான்மையை பெற்றதும் தங்களை புறந்தள்ளிவிட்டு மோடி தலைமையில் பாஜக செயல்பட்டதை ஆர்எஸ்எஸ் அமைப்பு விரும்பவில்லை என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான், 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்தது முதலே, பாஜகவிற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு நெருக்கடி தருவதாகவும், பிரதமர் பதவியில் இருந்து மோடியை நீக்கிவிட்டு தங்களுக்கு ஆதரவான நபரை அங்கு கொண்டு வரவும் ஆர்வம் காட்டுகிறதாம். இதே சிக்கல் தான், பாஜகவிற்கான புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் நிலவுவதாகவும், கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரிடையே ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இழுபறி தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





















