TVK Vijay : “விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது ஏன்” இவர்தான் காரணமா ? பரபரப்பு பின்னணி..!
‘களவாணி’ படத்தில் நடப்பது மாதிரி பாலக்கட்டை, தண்ணி டேங் போன்றவைகளில் எழுதப்பட்டவை எல்லாமே விரைவில் மக்கள் மன்றத்தில் திருத்தப்படும் என்பதில் மட்டும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இன்னும் ஒரு தேர்தலை கூட விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் நேரடியாக சந்திக்காத நிலையில், அவருக்கு ஏன் அவசர அவசரமாக ‘Y’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு கொடுத்துள்ளது என்ற கேள்விதான் இன்று காலை முதல் ஊடகத்தினர் மத்தியில் விவாத பொருளாகவும் மற்ற கட்சித் தலைவர்கள் இடையே ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மேலோட்டமாக பார்த்தால் வெவ்வேறு காரணங்கள் அவரவருக்கு ஏற்ப சொல்லக் கூடும். இன்னும், இன்னும் உன்னிப்பாக அரசியல் அறிந்தவர்களுக்கும் அரசியல் சூழ்ச்சியை புரிந்துக்கொண்டவர்களும் இது எதற்காக என்பது தெள்ளத் தெளிவாய் தெரியும். விஜய் மீதான பாஜகவின் திடீர் பாசத்திற்கு காரணம் என்ன ? இது திடீர் பாசம்தானா? என்பதெல்லாம் சமூக வலைதளங்களில் உருட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
பிரசாந்த் கிஷோர் பின்னணியில் யார்..?
பிரசாந்த் கிஷோர் விஜயை சந்தித்தப் பிறகுதான் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதற்கும் காரணம் உண்டு. காரணமில்லாமல் அரசியலில் ஒரு குண்டூசி கூட வீணாக கீழே எறியப்படுவதில்லை. ஏனென்றால், அதுதான் அரசியல்.
உண்மை காரணம் இதுதானா?
NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் ஆலோசகராக இருப்பவர் அஜித் தோவால், அவருடைய மகன் சவுரியா தோவால் என்பவர் பாஜகவின் ‘Think Tank” குழுவில் முக்கிய இடத்தில் இருக்கிறார். ஆதவ் அர்ஜூனாவை இயக்குவதும் இவர்தான் ; பிரசாந்த் கிஷோருக்கு தற்போதைய பின்புலமும் இவர்தான் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
ஆதவ் அர்ஜூனாவிற்கு கட்சி பதவி வாங்கிக் கொடுத்ததே இவர்தான்
ஆதவ் அர்ஜூனாவிற்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் என்ற பெரிய பொறுப்பை விஜய் கொடுக்க காரணமே பிரசாந்த் கிஷோர்-தான். பிரசாந்த் கிஷோர் பீகாரில் அரசியல் செய்ய பக்க பலமாக பண உதவி செய்வது ஆதவ் அர்ஜூனா. அதற்கு கைம்மாறு இது. இவற்றுக்கெல்லாம் மூலக் காரணம் சவுரியா தோவால். அவர் கணக்கே வேறு ; அதுதான் பாஜகவின் எப்போதைக்குமான கணக்கு. அந்த கணக்கில்தான் எல்லாமே இப்போது நடக்கிறது என்பது விவரமறிந்தவர்கள் சொல்வது.
ராகுல்காந்திக்கு இல்லாத அச்சுறுத்தலா?
அதிக பணம் செல்வாகிறது என்று மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல்காந்திக்கே Z பிரிவை விலக்கிக் கொண்டது மத்திய அரசு. அவருக்கு இல்லாத அச்சுறுத்தலா? அதே மாதிரி, இங்கே தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தப்போது அவருக்கு இருந்த பாதுகாப்பும் ரத்துச் செய்யப்பட்டது.
ஆனால், களத்திற்கு சென்றால் கூட்டம் கூடி விடும் என்பதற்காக அலுவலகத்தில் வைத்தே நலத் திட்டங்களை செய்கிறேன் என்கிற விஜய்க்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய CRPF வீரர்கள் கொண்ட ஒரு காமாண்டோ படையே பாதுகாப்பிற்காக இறக்கவிருக்கிறது மத்திய அரசு.
அண்ணாமலை திரைப்படத்தில் ராதாரவி சொல்வது மாதிரிதான் ‘கூட்டி கழிச்சு பாரு, கணக்கெல்லாம் கரெக்டாதான் வரும்’ ஏன்னா, இது கங்காதரன் கணக்கு என்பார். இப்போது கங்காதரனாக இருப்பது யார் என்பது கூட்டி, கழித்துப் பார்த்தால் அனைவருக்கும் தெரியும்.
‘களவாணி’ படத்தில் நடப்பது மாதிரி பாலக்கட்டை, தண்ணி டேங் போன்றவைகளில் எழுதப்பட்டவை எல்லாமே விரைவில் மக்கள் மன்றத்தில் திருத்தப்படும் என்பதில் மட்டும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.





















