White Vs Black Paper: பாஜக சொன்ன வெள்ளை அறிக்கை - கருப்பு அறிக்கையால் காங்கிரஸ் தந்த ஷாக்: ஒரு முழு அலசல்
White Paper vs Black Paper: மத்திய அரசின் வெள்ளை அறிக்கை திட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
Black Paper Report: மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின், கருப்பு அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.
பாஜக சொன்ன வெள்ளை அறிக்கை:
கடந்த 1ம் தேதி 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் முடிவில், முந்தைய காங்கிரஸ் அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார கொள்கைகள், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதாவது காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சி 2014ம் ஆண்டு முடிவுற்ற போது நாட்டின் பொருளாதார நிலை எப்படி இருந்தது, பாஜக ஆட்சி அமைந்த கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலை எப்படி உள்ளது, என்பது தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய வெளிப்படையான அறிக்கை வெளியாகும் என அறிவிக்கப்படது. இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, பாஜக பயன்படுத்தப்போகும் முக்கிய அஸ்திரமாக இந்த வெள்ளை அறிக்கை பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள் தொடர்பான, 10 ஆண்டு அநியாய ஆட்சி காலம் (10 Saal Anyay Kaal) என்ற தலைப்பிலான கருப்பு அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே வெளியிட்டுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் ஆளுங்கட்சிக்கு எதிராக கருப்பு அறிக்கை என்ற பெயரில், எதிர்க்கட்சி வெளியிட்ட முதல் அறிக்கை இதுவாகும். அதில், “பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்” என கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலைவாய்ப்பின்மை:
கே.ஆர்.நாராயணன் முதலில் துணை குடியரசு தலைவராகவும், பின்னர் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிப்பிட்ட கார்கே " காங்கிரசும் உலகளவில் அறியப்பட்ட மக்களையும் குடியிஅரசு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளோம். ஆனால் உண்மையான சமூக நீதிக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் பற்றி பாஜக ஒருபோதும் பேசுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளை பற்றி தான் பேசுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களைப் பற்றி பாஜக பேசியது எனக்கு வேடிக்கையாக இருந்தது. நேரு தொடங்கிய HAL, BEL, BHEL போன்ற நிறுவனங்களைப் பற்றி அவர்கள் ஒருபோதும் பேச மாட்டார்கள். முந்தைய அரசாங்கங்கள் உருவாக்கிய வேலைவாய்ப்பு மற்றும் தரமான வேலைகள் பற்றி பேச மாட்டார்கள். உண்மை என்னவென்றால், மக்களுக்கு வேலை கொடுப்பதை பாஜக விரும்பவில்லை" என்று கார்கே சாடியுள்ளார்.
”ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் பாஜக”
பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சி அரசாங்கங்களை கவிழ்க்க பாஜக குதிரை பேர உத்திகளைப் பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்பை ஏவுகிறது. நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 411 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. கைப்பற்றியது. பல காங்கிரஸ் தலைமையிலான அரசுகளை கவிழ்த்துள்ளது. ஜனநாயகத்தை ஒழித்துகட்டுகின்றனர்.
மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (MGNREGA) கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியை வெளியிடாததால், கிராமப்புற வேலைவாய்ப்புகள் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டப்படுகின்றன. பாஜக அல்லாத அரசுகளைக் கொண்ட கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
பாஜக தனது நண்பர்களுக்கு சாதகமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தவில்லை
பாஜக தலைமையிலான மத்திய அரசு வேண்டுமென்றே விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவில்லை, ஏனெனில் அது பாஜகவின் 'தொழில்துறை நண்பர்களுக்கு' உதவும். நேரு, ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி ஆகியோரைக் குறை கூறாமல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த சட்டம் உள்ளது. ஆனால், இங்குள்ள பணவீக்கத்தால் இறக்குமதியால் பெரிதும் பயனடையும் பா.ஜ.கவின் சில நண்பர்கள் உள்ளனர். அதனால், இவர்கள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட கப்பல்கள் கரைக்கு அப்பால் நிறுத்தப்பட்டுள்ளன. விலை உயரும் போது மட்டுமே, இந்த கப்பல்கள் தங்கள் சரக்குகளுடன் துறைமுகத்திற்கு வருகின்றன. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையையும் அரசு வழங்குவதில்லை.
கலவரத்தை தூண்டுகிறீர்கள்:
நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? எப்போதும் நாட்டை உடைப்பது பற்றி பேசுகிறீர்கள்? கலவரத்தை தூண்டிவிட்டுள்ளீர்கள். நீங்கள் [பிரதமர் மோடி] உங்கள் பேச்சுகளால் கலவரத்தைத் தூண்டினீர்கள். நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது என்ன செய்தீர்கள். (2002 கலவரத்தை குறிப்பிடாமல்)
”சர்வாதிகாரிகளாக செயல்படும் ஆளுநர்கள்”
ஆளுநர்கள் சர்வாதிகாரிகளுக்குக் குறைந்தவர்களில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாஜக ஆளுநர்களை அனுப்புவதே அங்குள்ள ஆட்சியைக் கவிழ்க்க தான். பாஜக அரசு எங்கிருந்தாலும், ஆளுநர்கள் முழு ஒத்துழைப்பு தருகின்றனர். அதேநேரம், பாஜக இல்லாத மாநிலங்களில் கோப்புகள் திருப்பி அனுப்பப்படுகின்றன அல்லது நிலுவையில் வைக்கப்படுகின்றன” என மத்திய அரசுக்கு எதிரான கருப்பு அறிக்கையில் மல்லிகர்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.