தாய், தந்தை இல்லை.. அரசு பள்ளியில் முதலிடம்.. சாதித்த அக்கா, தங்கை - உதவுமா தமிழக அரசு?
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அரசு பள்ளியை சேர்ந்த மாணவி பன்னிரண்டாம் வகுப்பில் 553 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.

12 -ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. 12 ஆம் வகுப்பு தேர்வில் பல்வேறு ஏழை மற்றும் எளிய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர். மதிப்பெண்கள் பெற்று சாதித்த மாணவ, மாணவிகளால், முறையாக மேல் கல்வி தொடர முடியாது சூழல் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக அந்த மாணவ, மாணவிகளின் குடும்ப பின்னணி இருந்து வருவது வேதனை தருவதாக அமைந்து இருக்கிறது.
அரசு பள்ளியில் முதலிடம்
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெங்கோடு கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன் மற்றும் பரிமளா ஆகியோரின் மகள் கவிதா மற்றும் திவ்யா இருவரும் வந்தவாசி அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். மூத்த மகளான கவிதா பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அதேபோன்று திவ்யா பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
12 -ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த கவிதா, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 553 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அதேபோன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய இவரது தங்கை திவ்யாவும் 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். அக்கா மற்றும் தங்கை ஆகிய இருவரும் பள்ளியில் முதலிடம் பிடித்து அசத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தாய், தந்தை இல்லாமல் சாதனை
இவர்கள் இருவரின் தாய் பரிமளா திவ்யா பிறந்த 10 மாதங்களில் விபத்து ஒன்றில் உயிரிழந்து உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது தந்தை மனைவி பிரிந்ததால் துக்கத்தில், இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தந்தை மனநலம் பாதிக்கப்பட்ட இருந்த நிலையில், சகோதரிகள் கவிதா மற்றும் திவ்யா இருவரும் வீரராகவனின் சகோதரர் பராமரிப்பில் வசித்து வந்துள்ளனர். மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த வீரராகவன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் இழந்த கவிதா, திவ்யா சகோதரிகள் குடும்ப சூழ்நிலை மனதில் கொண்டு, தங்களை காப்பாற்றிக் கொள்ள படிப்பு மட்டுமே உதவும் என அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் படித்து வந்துள்ளனர். பொறியியல் படிக்க ஆர்வமுள்ள கவிதா, பண வசதி இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உதவிக்காக காத்திருக்கும் மாணவி
கடந்த 19ஆம் தேதி வந்தவாசியில் நடந்த நான் முதல்வன் நிகழ்ச்சி மூலமாக தனியார் கல்லூரியில் சேர்க்க பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் முயன்ற போதும், மாணவி எதிர்பார்க்கும் சென்னை பகுதியை சேர்ந்த கல்லூரி இந்த அரங்கில் பங்கு பெறாததால், மாணவி பெரும் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு, மேல்படிப்பு படிக்க பணம் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.





















