Vijayakanth: ”விஜயகாந்த் நல்லா இருக்காரு... மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்” - பிரேமலதா விஜயகாந்த்!
விஜயகாந்த் நல்லா இருக்காரு... மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடல்நல பாதிப்பால் கடந்த 18ம் தேதி கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அவரால் மூச்சு விட முடியவில்லை என்று மருத்துவமனை அறிக்கை கூறுகிறது.
விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கும் மியாட் மருத்துவமனை, விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என அறிக்கை வெளியிட்டிருந்தது. விஜயகாந்திற்கு தொடர்ந்து நுரையீரல் பாதிப்புக்கான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதால் அவர் தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
விஜயகாந்த் நல்லா இருக்காரு:
விஜயகாந்தின் உடல்நிலை மேலும் மோசமானதாக இன்று பிற்பகல் தகவல் வெளியான நிலையில், அவரின் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமேலதா வதந்திகளை நம்ப வேண்டும் என்று சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (டிசம்பர் 2)வெளியிட்டுள்ள வீடியோவில், “தேமுதிக சொந்தங்களுக்கும், திரையுலகினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும், யூடியூப் சேனலை சேர்ந்தவர்களுக்கும் வணக்கம். சில தினங்களுக்கு முன்னர் நான் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன். அதில் விஜயகாந்த் நலமாக இருக்கிறார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டேன். ஆனாலும், தொடர்ந்து கேப்டனை வென் டிலேட்டரில் வைத்திருப்பதாகவும், செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் கேப்டனை சந்தித்து எனக்கு ஆறுதல் சொன்னதைப் போலவும் தொடர்ந்து யூடியூப் சேனல்களும், மற்ற சேனல்களும் பொய்யான தகவல்களை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்.
— Vijayakant (@iVijayakant) December 2, 2023
வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.
யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
- திருமதி. பிரேமலதா விஜயகாந்த். pic.twitter.com/sbzd0FDOX4
மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்:
இந்த வதந்திச் செய்திகள் தொண்டர்களையும், நிர்வாகிகளையும், திரையிலகினரையும், உறவினர்களையும், குடும்பத்தினரையும் மிகுந்த மன உளைச்சளுக்கு கொண்டு செல்கிறது. கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் எந்தவொரு பரபரப்பும் இன்றி அமைதியான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பரபரப்புகளும், வதந்திகளும் வெளியில் தான் உலாவிக் கொண்டிருக்கின்றன. தயது செய்து மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள். வதந்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
கேப்டன் நல்லா இருக்காரு. இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி வரும். வெகு விரைவில் கேப்டன் வீடு திரும்ப இருக்கிறார். நிச்சயம் வந்து அனைவரையும் சந்திக்க இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதனால், வீண் வதந்திகளையும், பரபரப்புகளையும் யாரும் நம்ப வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
இன்னைக்கு நானும் என்னுடைய இரண்டாவது மகன் சண்முகப்பாண்டியனும் கேப்டனை சந்தித்த புகைப்படத்தை கூட போட்டிருக்கிறோம். யாரும் வதந்திகளையும், பொய்செய்திகளையும் நம்ப வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.