Vijay Speech: வர்றேன்னு சொல்லு.! பட படவென பட்டாசாக வெடித்த தவெக தலைவர் விஜய் பேச்சு: முக்கிய 7 பாயிண்ட்ஸ்
TVK Leader Vijay speech: தமிழ் மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெற்று முடிந்துவிட்டது. த.வெ.க தலைவர் விஜய் உரையும் நிகழ்த்திவிட்டார்.
அரசியலுக்கு ஏன் வந்தேன் என்பது குறித்தும், கொள்கைகள் குறித்தும், யார் எதிரி என்பது குறித்தும், எந்த கட்சிகளை தாக்கி பேசியிருக்கிறார் என்பது குறித்தும் தவெக தலைவர் விஜய் பேசியது என்ன என்பது குறித்து பார்ப்போம்.
1. 110 அடி உயரத்தில் பறக்கும் தவெக கொடி:
கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி கட்சியை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி, கட்சி கொடி மற்றும் கட்சி பாடல் வெளியானது. மேலும், கட்சி கொள்கைகள் மற்றும் கொடியில் உள்ள சின்னங்கள் தொடர்பான விளக்கங்களை , முதல் மாநாட்டில் தெரிவிப்பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று தவெக மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் 110 உயரமுள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து , கட்சி கொள்கை பாடல் வெளியானது.
2.ஏன் அரசியலுக்கு வந்தேன்?
இதையடுத்து, தாய் - தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்று பேசிய தவெக தலைவர் விஜய், ” நடித்தோமா, நான்கு காசு பார்த்தோமா என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். நான் மட்டும் நல்லா இருக்க வேண்டும் என நினைப்பது சுயநலம் இல்லையா ? நம்மை வாழவைத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது விசுவாசமாக இருக்குமா? என நினைத்தேன், அதனால்தான் அரசியலுக்கு வந்தேன் என உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
3.அரசியல் வழிகாட்டிகள்:
இதையடுத்து, அரசியல் வழிகாட்டிகள் யார் என்பது குறித்து பேசுகையில், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோர் கட்சியின் அரசியல் வழிகாட்டிகளாக இருப்பார்கள் என விஜய் தெரிவித்தார்.
ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை, அறிஞர் அண்ணா சொன்னது போல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு" எனவும் தெரிவித்துள்ளார்.
4.கொள்கைகள்:
கொள்கைகள் குறித்து பேசுகையில் “ மதச்சார்பற்ற சமூகநீதிதான் முதன்மையான கொள்கை. ”பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்” பிறப்பில் எல்லா உயிர்களும் சமம். மதம், சாதி, இனம், பாலின அடையாளம் இல்லாமல் எல்லோர்க்கும் எல்லாம் என்பதை உருவாக்குவதே தவெகவின் கொள்கை. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையை தவெக பின்பற்றும். அதில் தமிழே ஆட்சி மொழி.
ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வருவது தவெகவின் கொள்கை. ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை சமமாக நடத்துவதே கொள்கை. அனைவருக்கும் விகிதாச்சாரப்படி இட ஒதுக்கீடு வழங்குவதே சமூக நீதி என்பது தவெகவின் கொள்கை என தெரிவித்தார்.
விஜய் குரலில் ஒலித்த த.வெ.கவின் கொள்கை #TVK #TVKVijay #TVKMaanadu #TamilagaVetriKazhagam #Vijay #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/BGrccqIkEs
— ABP Nadu (@abpnadu) October 27, 2024
5.அரசியல் குழந்தை:
“ஒரு குழந்தை முதன் முதலில் அம்மா என்று சொல்லும்போது, அந்த அம்மாவுக்கு சிலிர்ப்பு வரும். ஆனால் அந்த சிலிர்ப்பு எப்படி இருக்கும் என அந்த குழந்தைக்கு சொல்ல தெரியாது. சிரிக்க மட்டுமே தெரியும். அதேமாதிரி எதிரில் ஒரு பாம்பு வந்தால் சிரித்துக்கொண்டே அந்த பாம்பை பிடித்து விளையாடும்.
இங்கு பாம்பு என்பது அரசியல். நாம்தான் குழந்தை. அரசியலுக்கு நாம் எப்போதும் குழந்தைதான். ஆனால் பாம்பா இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி. இந்த குழந்தைக்கு பயம் இல்லை.
கொள்கைகள் அடிப்படையில் செயல்படுவதில் தவெக தொண்டர்கள் உறுதியாக இருக்க வேண்டும். எதற்காக அரசியலுக்கு வந்துள்ளோமோ அதை நிச்சயம் செய்து முடிப்போம். அதுவரை நெருப்பாக இருப்போம்.
நான் அரசியலுக்கு வருவதாக முடிவு செய்தபோது பூதம் வருவது போல் பல கேள்விகள் வந்தன. எதை பற்றியும் யோசிக்காமல் இறங்கி அடித்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என தோன்றியது.
6.யார் எதிரி:
நமக்கு பிரிவினைவாதிகள் மட்டும் எதிரியில்லை, ஊழல்வாதிகளும்தான். இவர்களும் இருவரும், நமக்கு எதிரிகள் என விஜய் தெரிவித்தார். திராவிடம் பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், குடும்ப அரசியல் குறித்தும் தவெக தலைவர் விஜய் பேசினார்.
எனக்கு பயமில்லை, நேரடியாக தாக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள். எதிரிகளை தாக்கி தாழ்த்தி பேச போவதில்லை; நம் அரசியல் , டீசண்ட் அப்ரோச்; டீசண்ட் அட்டாக், ஆனா டீப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
ஆனால் விஜய்யின் பேச்சு திமுக - பாஜக ஆகிய கட்சிகளை தாக்கி பேசியதாகவே அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிப்பதையும் பார்கக் முடிகிறது.
TVK Maanadu LIVE Updates: தமிழ்க வெற்றிக் கழகம் நிகழ்ச்சி நிகழ்வுகள்:
7.கூட்டணிக்கு தயார்:
தம்மோடு அரவணைத்து செல்வோரிடம் பயணிக்கலாம் என்று விஜய் தெரிவித்தார். இதன்மூலம், கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததை பார்க்க முடிகிறது.
இன்றைய அவரது உரையானது , கட்சி தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவே பார்க்க முடிகிறது. தவெக கட்சியின் கொள்கைகள் மற்றும் அரசியல் பயணம் குறித்து பேசுகையில் சில இடங்களில் சினிமா வசன சாயல் இருப்பதை பார்க்க முடிந்தது. ஆனால் அதிரடியாகவும் உறுதியாகவும் பேசினார் என்றே சொல்லலாம். மேலும் பேச்சில் நிதானத்தத்தை கைப்படித்ததையும் பார்க்க முடிந்தது.
அவ்வப்போது மிகவும் உணர்வுபூர்வமாகவும், கனத்த குரலிலும் விஜய்யின் பேச்சானது, தொண்டர்களை உற்சாகத்தில் கொண்டு சென்றது.
இந்த மாநாடானது, கட்சி தொண்டர்களுக்கு ஏமாற்றமளிக்கவில்லை என்றும் யார் எதிரிகள் மற்றும் கொள்கைகள் என்ன என்பதையும் தெளிவாக தெரிவித்து விட்டார் என்றே சொல்லலாம்.
2026 தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தவெக மாநாட்டில் , விஜய்யை தவிர பரீட்சையமான முகங்களை பார்க்க முடியவில்லை, ஒவ்வொரு தொகுதியிலும் மக்களுக்கு பழக்கமான நபர்களை கண்டறிந்து , தேர்தலில் எப்படி நிறுத்த போகிறார்? அதை எப்படி விஜய் கையாளப் போகிறார்? என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இனி, அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அரசியல் சாயம் இருக்கும் என்பதால், அவரின் முதல் செய்தியாளர் சந்திப்பு மற்றும் வருங்கால பயணம் உள்ளிட்டவைகள் மேலும் எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளன.