சம நீதிக்காக பாடுபடும் பிரதமர் மோடியை குறை கூறுவதா? - வானதி சீனிவாசன்
”அனைவருக்கும் சம நீதி கிடைக்க பாடுபட்டு வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை குறை கூறுவதை திமுக அரசு கைவிட வேண்டும்”
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அக்டோபர் 10-ம்தேதி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ’2014 -15 முதல் 2021-22 வரை மத்திய அரசின் நேரடி வரியில், தமிழ்நாட்டின் பங்கு ரூ. 5.16 லட்சம். ஆனால், இந்த காலகட்டத்தில் மாநிலங்களுக்கான வரி பகிர்வாக தமிழ்நாட்டிற்கு கிடைத்தது ரூ. 2.08 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், உத்தரப்பிரதேசத்திற்கு அவர்களின் பங்களிப்பை விட அதிகமாக நிதி கிடைத்துள்ளது’ என மத்திய அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இதே குற்றச்சாட்டை திமுக கூறி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதை பேசாத நாளே இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசை குறை கூறுவதையே திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கு தானும் விதி விலக்கல்ல என்பதைத்தான் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் பேச்சும் அமைந்துள்ளது. அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. கடந்த 9 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்கிய வரி பங்கீடு ரூ.2.46 லட்சம் கோடி. அத்துடன் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய உதவித் தொகை ரூ. 2.30 லட்சம் கோடி. இது தவிர தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பல்நிதியையும் சேர்த்து 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட மொத்த நிதி ரூ. 10.76 லட்சம் கோடி. இந்த உண்மைகளை மறைத்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசு மீது வீண்பழி சுமத்தியுள்ளார்.
ஆனால், 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கிடைத்ததைவிட பல மடங்கு அதிகம் இப்போது பாஜக ஆட்சியில் கிடைத்துள்ளது. பாஜக ஆட்சியில் வழங்கப்பட்ட நிதி விவரங்களைக் கூறும் நிதியமைச்சர், 2014-ம் ஆண்டு வரை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைத்த நிதி விவரங்களை சொல்ல தயங்குவதேன்? சிறந்த அரசு நிர்வாகம் என்பது, வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கு ஊக்கம் கொடுத்து, அந்த மாநிலங்களையும் முன்னேற்றுவதுதான். அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி பெற்றால்தான் நாடு வளர்ச்சி பெறும். இதனால்தான் பதவியேற்ற நாள் முதல், 'மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி' என பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார்.
அந்த அடிப்படையில்தான் அதிக மக்கள் தொகை கொண்ட, பின்தங்கிய மாநிலங்களுக்கு மத்திய அரசு ஊக்கம் கொடுத்து வருகிறது. அதற்கு பெரும் பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. அப்படி மத்திய அரசால் ஊக்கம் கொடுக்கப்பட்ட மாநிலங்கள் வேகமாக முன்னேறி வருவதை ஜி.எஸ்.டி வசூல் காட்டுகிறது. தொழில் வளம் இல்லாத வடகிழக்கு மாநிலங்களுக்கும் மத்திய அரசு சிறப்பு கவனம் கொடுக்கிறது. இதை திமுக எதிர்க்கிறதா? பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கக் கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடா? இதை அவர்களது கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஏற்கிறதா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டிலேயே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்துதான் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. அந்த நிதியைத்தானே மற்ற மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. இதைத்தானே மத்திய அரசும் செய்கிறது. தொழில் வளர்ச்சி இல்லாத மாநிலங்கள், மாவட்டங்களை ஒதுக்க நினைப்பது சமூக அநீதி. தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் விவசாயம் மிகமிக குறைவாகவே உள்ளது. தொழில் நிறுவனங்கள் இல்லாத, நாம் வளர்ச்சி அடையாத மாநிலங்கள் என பட்டியலிட்டு வரும் மாநிலங்களில் இருந்துதான் உணவுப் பொருட்கள், வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கும் கிடைக்கிறது. எனவே, அனைவருக்கும் சம நீதி கிடைக்க பாடுபட்டு வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை குறை கூறுவதை திமுக அரசு கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.