Udhayanidhi Stalin: அதிமுகவை விரைவில் ‘ICU‘-வில் அனுமதிக்கும் நிலை ஏற்படும் - உட்கட்சிப் பூசலை கிண்டலடித்த உதயநிதி
அதிமுக-வில் உட்கட்சிப் பூசல் மீண்டும் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியை விரைவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விரைவில் அதிமுகவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கு நிலையை மக்கள் ஏற்படுத்துவார்கள் என்று விமர்சித்துள்ளார்.
“விரைவில் அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும்“
சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், நவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் 28.75 கோடி ரூபாய் செலவில், தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சுற்றுப் பயணத்தில் உள்ளார், மக்களை சந்திக்கிறார், 10 நாட்கள் முன்பு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அங்கு வந்த ஆம்புலன்ஸ் வண்டியை நுழைய விடாமல் என்னவெல்லாம் தங்கள் செய்ய முடியுமோ அதை செய்தார்கள். அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது என்று கூறினார்.
விரைவில் அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும் நிலைமையை தமிழக மக்கள் ஏற்படுத்துவார்கள் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், விரைவில் அதிமுகவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் நிலைமை ஏற்படும் என கிண்டலடித்தார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றும் பொறுப்பை முதலமைச்சர் தான் செய்வார் எனவும் அவர் கூறினார்.
அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல்
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. சிறிது நாட்கள் முன்பு ஓ. பன்னீர்செல்வம் சிறு குழப்பத்தை ஏற்படுத்தினார். அதேபோல், செங்கோட்டையனும் மறைமுகமாக போர்கொடி தூக்கி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஓப்பனாகவே பேசிய செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியதோடு, அதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடுவும் விதித்தார்.
அதற்குள் அவர் ஏதும் செய்யவில்லை என்றால், தான் அந்த முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார். இதையடுத்து, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இத்தகைய சூழலில், இன்று டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவாருக்கு செல்வதாகக் கூறி, செங்கோட்டையன் புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமானம் ஏறுவதற்கு முன் பேசிய செங்கோட்டையன், டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திப்பதற்காக செல்லவில்லை என்று கூறினார்.
அதிமுகவில் அனைவரும் இணைந்து, அதன் பின்னரே தேர்தலை சந்திக்க வேண்டும், இல்லையென்றால் தோல்வியே மிஞ்சும் என்பது அவரது வாதமாக உள்ளது. ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி முரண்டு பிடித்து வருகிறார். இதனால், அதிமுகவில் தற்போது பெரும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.





















