Udhayanidhi: "தமிழ்நாட்டை சங்கி கூட்டத்தால் தொட்டுப் பார்க்க கூட முடியாது.." உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
தமிழ்நாட்டை சங்கி கூட்டத்தால் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.

திமுக-வின் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் திருவண்ணாமலை இன்று நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது,
அடிபணிந்தது கிடையாது:
"நம் திமுக 75வது ஆண்டைக் கடந்து 76வது ஆண்டில் பயணிக்கிறோம். மொழிக்காக உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள். எந்த நேரத்திலும் களத்தில் இருந்து பின்வாங்கியது கிடையாது. ஆதிக்கத்திற்கு அடிபணிந்தது கிடையாது. எந்த நேரத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுத்தது கிடையாது. அப்படிப்பட்ட திமுக-வை இன்று சிலர் மிரட்டிப் பார்க்கிறார்கள்.
குஜராத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகாரில் இன்று வெற்றி பெற்றுள்ளோம். அடுத்து எங்கள் இலக்கு தமிழ்நாடு என்று பேசுகிறார். அமித்ஷாவிற்கும், அவரது அடிமைக் கூட்டத்திற்கும் ஒன்று சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு சீண்டினாலும், எவ்வளவு மிரட்டினாலும் அதை எதிர்கொள்வதற்கு கருப்பு, சிவப்பு இளைஞரணி படை தயாராக உள்ளோம்.
அவுட் ஆஃப் கன்ட்ரோல்:
1949ம் ஆண்டு அண்ணா நமது கட்சியை ஆரம்பிக்கும்போது டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்க்கத்தான் நாங்கள் வருகிறோம் என்று கருப்பு, சிவப்பு கொடியை ஏற்றுகிறோம். அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டை காப்பாற்றும் களத்தில் திமுக என்றும் முன்வரிசையில் உள்ளது. இந்த போர்க்களத்தில் எதிரிகள்தான் மாறி, மாறி வந்துள்ளார்கள். ஆனால், திமுக என்றுமே அதே வலிமையுடன் உள்ளது.
முதலமைச்சர் சொன்னது என்றுமே தமிழ்நாடு டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான். திமுக ஆட்சி, அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று உருவாக்கப்பட்ட இயக்கம் கிடையாது. தமிழ்நாட்டு மக்களை, தமிழனத்தை காப்பாற்ற வந்த இயக்கம். மிசா என்ற நெருப்பாற்றலை நீந்தி வந்த இயக்கம். தமிழக வரலாற்றிலே ஈடு இணையில்லாத மொழிப்போரை நடத்தி வெற்றி பெற்ற இயக்கம். தமிழ் மொழிக்காக தண்டவாளத்தில் தலை வைத்த இயக்கம் திமுக.
தொட்டுக்கூட பார்க்க இயலாது:
குஜராத்தில் உட்கார்ந்து மிரட்டி பணிய வைக்க நினைத்தால் நிச்சயம் அது கனவிலும் நடக்காது. கடைசி உடன்பிறப்புகள் இருக்கும் வரை தமிழ்நாட்டை சங்கி கூட்டத்தால் தொட்டுக்கூட பார்க்க இயலாது. நீங்கள் பீகாரில் வெற்றி பெற்றிருக்கலாம். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என்று வட நாட்டில் வெற்றி பெற்றிருக்கலாம்.
தமிழ்நாட்டில் எளிதாக நுழைந்துவிடலாம் என்று ஒரு தப்புக்கணக்கு போடுகிறீர்கள். தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது. பெரியார் என்ற கொள்கை நெருப்பு தமிழ்நாட்டைச் சுற்றி காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அண்ணா, கலைஞர் தமிழ்நாட்டை இன்றும் உணர்வாக இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். 23 வயதிலே மிசாவை எதிர்கொண்ட தலைவர் இங்கு இருக்கிறார்."
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன்நேரு, எவ வேலு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மேலும், முக்கிய நிர்வாகிகள் பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சுமார் 1.20 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பாஜக-வையும், எடப்பாடி பழனிசாமியையும் மிக கடுமையாக விமர்சித்து பேசினார்.





















