கொரோனா தடுப்பூசியால் 2 மாணவிகளுக்கு பாதிப்பு? விளக்கமளித்த மருத்துவத்துறை
ராணிப்பேட்டையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, சட்டசபையில் அ.தி.மு.க. கொறடா சு.ரவி அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்.
![கொரோனா தடுப்பூசியால் 2 மாணவிகளுக்கு பாதிப்பு? விளக்கமளித்த மருத்துவத்துறை two students from Ranipettai affected due to Covid Vaccine - Report will be sent to New Delhi says Tamil Nadu Health Minster கொரோனா தடுப்பூசியால் 2 மாணவிகளுக்கு பாதிப்பு? விளக்கமளித்த மருத்துவத்துறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/83cdb832fd1b071c7cd37709753f85ae_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராணிப்பேட்டையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, புதுடெல்லிக்கு ஆய்வறிக்கை அனுப்படும் என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் தெரிவித்துள்ளார். அதிமுக. எம்.எல்.ஏ. சு.ரவி அரசின் கவனத்தை ஈர்த்து பேசியபோது இந்தப் பதிலை தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நேரமில்லாத நேரத்தில் அதிமுக எம்.எல்.ஏ. சு.ரவி கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் இரண்டு மாணவிகளுக்கு ஏற்பட்ட பிரச்சனையை எழுப்பி பேசியபோது, “ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் நகரத்தில் யோகலட்சுமி என்ற மாணவி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். அதன்பிறகு, அவருக்கு கண்பாா்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொரு மாணவி பிரியதா்ஷனிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் இரண்டு கை, கால்கள் செயல் இழந்துள்ளன. இதற்கு காரணம் தடுப்பூசியா, வேறு காரணமா எனத் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளின் குடும்பமும் மிகவும் ஏழ்மையான குடும்பம். அவா்கள் பூரண குணம் அடையவும் தேவையான உதவிகளை அரசு செய்வதுடன், தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதியும் வழங்க வேண்டும் என்றாா்.
இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்து பேசினார். அப்போது “தமிழகத்தில் இதுவரை 10 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரத்து 372 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. ராணிப்பேட்டை மாவட்டம், எத்திராஜ் அம்மாள் முதலியாண்டான் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 17 வயது ஆர்.யோகலட்சுமி மற்றும் அதே பள்ளியில் படித்து வரும் 15 வயது, பி.பிரியதர்ஷினி ஆகியோர் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி செலுத்தியவுடன் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சில நாட்கள் கழித்து, ஆர்.யோகலட்சுமி என்கின்ற மாணவிக்கு கண் பார்வை பிரச்சனை இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையிலும், உயர் சிகிச்சை தேவைப்பட்டதால் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையிலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையிலும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
அதோடு பிரியதர்ஷினி என்கின்ற மாணவிக்கு உடல் பலவீனம் பிரச்சினை காரணமாக அதேபோல் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கூறிய 2 மாணவிகள் மற்றும் அவர்கள் பெற்ற சிகிச்சைகள் குறித்து 12-ந்தேதி மாவட்ட மற்றும் மாநில அளவிலான தடுப்பூசிகளை செலுத்தியதற்கு பிறகு வரும் பின்விளைவுகளை கண்காணிக்கும் குழு கூடி அனைத்து மருத்துவ ஆவணங்களையும் பரிசீலித்தது.
அதன்பிறகு, கண்காணிப்பு குழு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். அப்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் யோகலட்சுமி-க்கு ஏற்பட்ட பின்விளைவுகளுக்கும் தடுப்பூசி செலுத்தியதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், பிரியதர்ஷினிக்கு வேறு நோயாக இருக்கலாம் என்றுன் கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பா என அறிய, மருத்துவ அறிக்கையை மேலும் பரிசோதனைக்காக புதுடெல்லியில் உள்ள பின்விளைவுகளைக் கண்காணிக்கும் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளன.
எனவே, பாதிக்கப்பட்ட இருவருக்கும் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் தொடர்ந்து உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்ததும் முதல்-அமைச்சர் என்னையும், கதர்துறை அமைச்சரையும் மாணவிகளின் வீட்டிற்கு சென்று நிலைமையை பரிசீலித்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார். அடுத்த வாரம் நாங்கள் அங்கு செல்ல இருக்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)