Uddhav Thackarey : `பதவி விலகத் தயார்!’ : அறிவித்த உத்தவ் தாக்கரே.. என்ன நடக்கிறது மகாராஷ்ட்ராவில்? இதோ டாப் 10 அப்டேட்ஸ்!
மகாராஷ்ட்ராவின் அரசியல் நிலவரம் குறித்த சமீபத்திய டாப் 10 அப்டேட்களை இங்கே கொடுத்துள்ளோம்..
மகாராஷ்ட்ராவின் ஆளுங்கட்சியான சிவ சேனா கட்சி தனது கூட்டணிக் கட்சிகளான சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளத் தயார் எனவும், ஆனால் கட்சிக்குள் இருக்கும் தனது எதிர்ப்பாளர்கள் தன்னிடம் 24 மணி நேரங்களில் திரும்பினால் மட்டுமே அவ்வாறு செய்வதாகவும் தெரிவித்துள்ளது. சிவ சேனா கட்சிக்குள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எதிர்ப்பாளர்களின் அணிக்குக் கூடுதல் எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கிடைத்ததால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் சிவ சேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்ட்ரா முதல்வரும் ஆன உத்தவ் தாக்கரே.
மகாராஷ்ட்ராவின் அரசியல் நிலவரம் குறித்த சமீபத்திய டாப் 10 அப்டேட்களை இங்கே கொடுத்துள்ளோம்..
1. சிவ சேனா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரௌத், `மகாராஷ்ட்ரா மாநில அரசின் மகா விகாஸ் அங்காடி கூட்டணியில் இருந்து வெளியேற தயாராக இருக்கிறோம். ஆனால் கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்பாளர்கள் கவுஹாதியில் இருந்து மும்பைக்கு 24 மணி நேரங்களில் திரும்பிவிட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
2. சஞ்சய் ரௌத் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் கலந்துரையாட வேண்டும் எனவும், ட்விட்டர், வாட்சாப் முதலான தளங்களில் எதையும் எழுத வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
3. உள்கட்சி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மகாராஷ்ட்ராவில் சிவ சேனா கட்சியின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிக்கார்ஜூன் கார்கே, `இதை ஒற்றுமையாக முறியடிப்போம்.. மகா விகாஸ் அங்காடி கூட்டணி இணைந்தே இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.
4. சிவ சேனா கட்சியில் எதிர்ப்பாளர்கள் அணியை வழிநடத்தி வரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 41 எம்.எல்.ஏக்கள் தற்போது கவுஹாதியில் தங்கி இருக்கின்றனர். கடந்த இரண்டரை ஆண்டுகளாக, கூட்டணி ஆட்சியில் சிவ சேனா தலைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், கூட்டணி கலைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஒரு வாரம் முழுவதும் கவுஹாதியில் விடுதியை முன்பதிவு செய்திருப்பதாகவும், நீண்ட காலப் போராட்டத்திற்கும் தயார் எனவும் கூறப்பட்டுள்ளது.
5. கவுஹாதியில் எதிர்ப்பாளர்களுள் ஒருவரான எம்.எல்.ஏ சஞ்சய் சிர்சத் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவைக் குற்றம் சாட்டி, `கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதல்வரின் வீட்டு எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது’ எனக் கூறியுள்ளார்.
6. சமீபத்தில் கவுஹாதியில் எதிர்ப்பாளர்களுடன் இணைந்த எம்.எல்.ஏ தீபக் கேசர்கர் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலக யாரும் கோரவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், அவர், `இயற்கையான கூட்டணியான பாஜகவுடன் இணைந்து புதிய அரசை அமைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’ எனக் கூறியுள்ளார்.
7. எம்.எல்.ஏ தீபக் கேசர்கர் மேலும், `நேற்று வரை ஏக்நாத் ஷிண்டேவிடம் 37 சிவ சேனா எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இன்று, நானும், சிவ சேனா கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்களும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏவும் வந்துள்ளோம். அடுத்த சில மணி நேரங்களில் மேலும், இருவர் அல்லது மூவர் இங்கே வருவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
8. தனது தந்தை பால்தாக்கரேவால் கட்டி, பல ஆண்டுகளாக நடத்தி வரப்பட்ட சிவ சேனா கட்சியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களுக்குத் தலைவராக மாறியுள்ளார் உத்தவ் தாக்கரே. இன்று அவர் அழைத்திருந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் வெறும் 13 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இதுகுறித்து பேசிய சஞ்சய் ரௌத், `எதிர்த்து வரும் எம்.எல்.ஏக்கள் மும்பைக்குத் திரும்பும் போது, அவர்கள் எங்களை விட்டு விலகும் போது என்ன விதமான அழுத்தம் அவர்களுக்கு இருந்தது என்பது வெளியில் வரும்’ எனக் கூறியுள்ளார்.
9. தனது எதிர்ப்பாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, `என் மக்களே என்னை முதல்வராகப் பார்க்க விரும்பவில்லை என்றால், என்னிடம் நேராக வந்து சொல்ல வேண்டும்.. நான் பதவி விலகத் தயாராக இருக்கிறேன்... நான் பாலாசாகேபின் மகன்.. நான் பதவிக்காக இருப்பவனல்ல’ எனக் கூறியுள்ளார்.
10. மகாராஷ்ட்ராவில் அரசியல் சூழல் இவ்வாறு இருப்பதன் பின்னணியில் பாஜகவின் `ஆபரேஷன் லோட்டஸ்’ இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இன்று மகாராஷ்ட்ரா பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்துள்ள மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் பாட்டீல் டான்வே, `நாங்கள் ஏக்நாத் ஷிண்டேவிடம் பேசவில்லை.. பாஜகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நாங்கள் அரசு அமைக்கக்கோரவில்லை’ எனக் கூறியுள்ளார்.