‘இனி நம்முடைய பாதை சிங்கப்பாதை’... கர்ஜிக்கும் அண்ணாமலையின் முழு பேச்சு இதோ
ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடக் கூடாது என இது போன்று நடவடிக்கை எடுக்கவில்லை அவர் நிச்சயமாக தேர்தலில் போட்டியிட வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். தேர்தலில் செயல்பட வேண்டிய விதம் குறித்தும் தேர்தலுக்காக கட்சி கட்டமைப்புகளில் செய்ய வேண்டிய விதம் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, “பிரதமர் நரேந்திர மோடி ஒன்பது ஆண்டுகால ஆட்சியை முடித்து பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி தொடாத இடங்களையும் தொட்டுவிட்டது தேர்தலுக்காக மட்டும் வாக்காளர்களை குறி வைத்து ஆட்சி நடந்ததை மாற்றியமைத்து மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி அனைத்து தரப்பு மக்களுக்கானதாக அமைந்துள்ளது. பெண்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என மோடி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 75 ஆண்டுகள் இல்லாத அளவில் மோடி தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது. வாக்குக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட பட்டியல் இன சமூகத்தை மையப் புள்ளிகள் வைத்து ஆட்சி செய்து வருகிறது. பாஜகவின் வெற்றி வாக்கிய இயந்திரத்தை கைப்பற்றி நடந்ததாக 2014 இல் சொல்லி வந்தனர். 2019-ல் அரசுத்துறை அனைத்தையும் கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றதாக சொன்னார்கள் 2024 இல் பாஜக பெரும் வெற்றியை வைத்து மக்களை வசியம் செய்து வெற்றி பெற்றார்கள் என சொல்ல போகிறார்கள்.
தமிழகத்தில் களம் மாறிவிட்டது 30 ஆண்டுகளாக கூண்டில் இருந்து தற்போது கிளி கூண்டை விட்டு வெளியே வர தயாராகிவிட்டது பறப்பதற்கு சக்தி வந்துவிட்டது. கிளியால் பறக்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்து விட்டது. பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வந்து விட்டது தமிழகத்தில் புரட்சிக்கான நேரம் தயாராகிவிட்டது நமக்கான நேரம் வந்துவிட்டது. பாஜகவினர் கூனி குறுகி வாக்கு கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம்.
2024 ல் மறுபடியும் மோடி தான் ஆட்சிக்கு வரப்போகிறார் வாக்குக்கு பணம் கொடுக்கும் பார்முலாவை முதலில் ஆரம்பித்தது திருமங்கலத்தில் இல்லை. தூத்துக்குடியில் வஉசி காலத்தில் நடந்த சுதேசி கப்பல் இயக்கத்திற்கு எதிராக அதிகமாக பணத்தை வாரி இறைத்து கிழக்கு இந்திய கம்பெனியினர் செயல்பட்டனர். அதுவே முதல் இலவசம் அப்போது தொடங்கியது. இன்று வரை நடைமுறையில் உள்ளது. கிழக்கிந்திய கம்பெனியின் வழித்தோன்றலே திமுக. கிழக்கிந்திய கம்பெனி குடை தான் கொடுத்தது திமுக கொலுசு வரை கொடுக்கும் நிலை உருவாகிவிட்டது. இப்படி போய்க்கொண்டிருந்தால் ஜனநாயகம் முட்டு சந்துக்கு போய்விடும். இளைஞர்களை தொழிலதிபராக மாற்றும் முயற்சியில் மோடி அரசு செயல்படுகிறது இளைஞர்களை போஸ்டர் ஒட்டவைத்து கோபாலபுரத்தில் நாலாவது தலைமுறையும் முதல்வராக்கும் முயற்சியை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
நமக்கான நேரம் வந்துவிட்டது தமிழகத்தில் பாஜகவிற்கான புதிய பாதை தேவைப்படுகிறது ஒவ்வொருவரையும் உயர்த்தும் முயற்சியை பாஜக செய்கிறது. திமுக ஒவ்வொருவரையும் தாழ்த்தும் நிகழ்வை செய்து வருகிறது. மக்களை இணைப்பது உயர்த்துவது தேசிய மாடல் மக்களை பிரிப்பது தாழ்த்துவது திராவிட மாடல். நம்முடைய பாதை தனிப்பாதையாக இருக்க வேண்டும். சிங்கப்பாதையாக இருக்க வேண்டும். நேர்மையான நெஞ்சுரம் மிக்க பயணமாக இருக்க வேண்டும். சில முக்கிய முடிவுகளை எடுக்க கட்சியின் அடித்தளம் உறுதியாக வேண்டும். இந்திய அரசியலில் புரட்சியை இயக்கங்கள் பூத்கமிட்டி வைத்து செயல்படவில்லை பாஜகவிடம் பூத் கமிட்டியும் உள்ளது புரட்சியும் உள்ளது. மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது பாலும் தண்ணியும் சேராது நம்முடைய பாதை தனி பாதை சிங்கப்பாதை 2024லும் நடக்கும் 2026லும் இது நடக்கும் நாம் கூண்டுக்கிளி அல்ல நாம் பறப்பதற்கு தேவையான நேரத்திற்காக காத்திருந்தோம் பரப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நிச்சயம் மாற்றம் நடக்கும்” என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் அவர் அளித்த பேட்டியில், “சட்டம் அனைவருக்கும் பொருந்தும். ஏழை எளியவர்களுக்கு ஒரு சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலை இல்லை. சட்டம் அனைவருக்கும் சமமானது. மோடியை அவதூறாக விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அவர் மேல் முறையீட்டிருக்கு செல்லலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தவிர நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என கூறவில்லை. சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பளித்த வகையில் தண்டனை பெற்ற எம்பிக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல ராகுல் காந்தியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாதாரண மனிதனுக்கு ஒரு நீதி அரசு குடும்பத்திற்கு ஒரு நீதி என்று இல்லாமல் அனைவருக்கும் ஒரே நீதி என்ற அடிப்படையில் பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடக் கூடாது என இது போன்று நடவடிக்கை எடுக்கவில்லை அவர் நிச்சயமாக தேர்தலில் போட்டியிட வேண்டும். அவர் பேச பேச தான் பாரதிய ஜனதா கட்சிக்கு வளர்ச்சி. ராகுல் காந்தி தான் பாஜகவின் பிரண்ட் அம்பாசிட்டர்” என்று தெரிவித்தார்